கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி., உதவியாளரிடமே ‘பணம் பறிப்பு’..! – யாரு இப்படி வேலையா பண்றது?

Estimated read time 1 min read

சிவகங்கை:

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ. 3 லட்சம் மோசடி – சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது மொபைல் போனில் உள்ள வாட்சப் எண்ணிற்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய உதவியாளர் சர்மிளா 10 ஆயிரம் ரூபாயை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல் அடிக்கடி குறுஞ்செய்தி வரவே இவரும் 30 முறை 10 ஆயிரம் ரூபாய் என 3 லட்ச ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்ட அவர் இது குறித்து ஆட்சியரின் அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலியான கணக்கு என்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவம் தொடர்பாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் துவங்கிய நிலையில் அந்த போலி செல்போன் கணக்கு பிஹார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஆட்சியரின் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                             – Gowtham Natarajan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours