கொல்கத்தா:
‛‛மத்திய அரசு சார்பில் மேற்கு வங்கத்துக்கு ரூ.97,807 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகையை வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் முழுவதுமாக அடுத்த 5 ஆண்டுகள் ரத்து செய்யப்படும்” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அனைத்து மாநில மதல்வர்களுடன் நேற்று காணொலி வாயிலா ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ‛‛6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என அவர் கூறினார்.
விலை உயர்வில் மோடி கவனம்
மேலும், நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது. மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
மேற்கு வங்கம், தமிழகம்
இதற்கு சில மாநிலங்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்துள்ளது. மக்களுக்கு கூடுதல் சுமையை மாநில அரசுகள் ஏற்படுத்தி உள்ளன. இதனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வாட் வரியை குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும்” என்றார்.
மாநிலங்கள் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோளுக்கு அந்தந்த மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தான் மேற்கு வங்க அரசும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை செய்தால் வரிகள் ரத்து
அதில், ‛‛இது எங்களின் உறுதிமொழி. மேற்கு வங்கத்துக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம். மத்திய அரசு சார்பில் மேற்கு வங்கத்துக்கு ரூ.97,807.91 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதை வழங்குவாரா என பார்ப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-Nantha Kumar R
+ There are no comments
Add yours