– Noorul Ahamed Jahaber Ali
சென்னை:
குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளதா எனக்கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி புதன்கிழமை இரவு அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டதாகக்கூறி அவரை பாஜக ஆளும் அசாம் மாநில காவல்துறை கைது செய்தது.
ஜிக்னேஷ் மேவானி
ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஜிக்னேஷ் மேவானி, தொடர்ந்து தலித் உரிமைகளுக்காகவும், சாதி, மத வெறிக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி மக்களின் ஆதரவை பெற்றார். இதன் விளைவாக கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு சுயேட்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மோடியின் சொந்த மாநிலத்தில் வெற்றி
பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலத்திலேயே சுயேட்சையாக வென்ற ஜிக்னேஷ் மேவானி, இதனால் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். தொடர்ந்து போராட்டக்களங்களிலும், ட்விட்டரில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் மத்திய மாநில பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார் ஜிக்னேஷ் மேவானி.
ஜிக்னேஷ் மேவானி கைது
இந்த ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 11:30 மணியளவில் குஜராத்தின் பாலன்பூரில் இருந்த ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைகூட தெரிவிக்கவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை நகலை தங்களிடம் வழங்கவில்லை எனவும் அவரது உதவியாளர் குற்றம்சாட்டினார்.
ஏன் கைது?
அவரை அகமதாபாத் அலைத்துச் சென்ற அசாம் போலீசார் அங்கிருந்து கவுகாத்திக்கு கூட்டிச் சென்றனர். பெரும் பரபரப்புக்கு மத்தியில் அசாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேவானியின் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. தனது கைதுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜிக்னேஷ் மேவானி, “நாட்டில் மத ஒற்றுமையை உடைக்க முயற்சி நடப்பதால், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்து இருந்தேன். அதற்காக என்னை கைது செய்துள்ளார்கள்.” எனக்கூறினார்.
திருமாவளவன் கண்டனம்
ஜிக்னேஷ் மேவானியின் கைதுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “குஜராத் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அவர்கள் அசாம் காவல்துறையினரால் பொய்வழக்கில் கைது. பிரதமரை விமர்சிக்கவே கூடாதா? இங்கே அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைமுறையில் உள்ளதா? மோடி அரசின் இந்த ஃபாசிசப் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
+ There are no comments
Add yours