சேலம்:
தாரமங்கலம் அருகே சிறுமியை காரில் கடத்தி ஆபாசமாக படம் எடுத்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் உள்ள கிராமத்தில் 29 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 13 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இவர் வீட்டில் இருந்து கொண்டு புடவைக்கு கல் பதிக்கும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த தொழிலாளியின் மைத்துனர் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். ஆனாலும் தொழிலாளியும், அந்த பெண்ணும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொழிலாளியின் மைத்துனர், சம்பவத்தன்று அந்த பெண்ணின் மகளான 13 வயது சிறுமி கடைக்கு சென்ற போது காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியை காரில் வைத்தே ஆபாசமாக படம் எடுத்து விட்டு இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளியின் மைத்துனர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து சிறுமியை காரில் கடத்தி ஆபாச படம் எடுத்ததாக தொழிலாளியின் மைத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours