சேலம்:
சேலத்தில் 3.66 லட்சம் குழந்தைகளுக்கு 2,414 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் என மொத்தம் 2,414 மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து காலை 7 மணி முதலே அனைத்து மையங்களிலும் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டு செல்கின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 590 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 9,579 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.
அனைத்து மையங்களிலும் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து போடப்படுவதால் பெற்றோர்கள் அனைவரும் தவறாது இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ளுமாறு சுகாதாரத்துறை தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours