பெட்ரோபொலிஸ்:
பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான பெட்ரோபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பலத்த மழை எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், நூற்றுக்கணக்கான கிராமங்களை தனி தீவுகளாக்கிவிட்டன. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களை பேரிடர் மேலாண்மை படையினர் தேடி வருகின்றனர். கொட்டும் மழைக்கு இடையே மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours