அத்துமீறும் ராணுவம்.. பெற்ற பிள்ளைகளை கழற்றிவிட்ட பெற்றோர்கள்! என்ன நடக்கிறது மியான்மரில்?

Estimated read time 0 min read

மியான்மர்:

மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் போராட்டத்தை ஒடுக்க அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த 1962 தொடங்கி சுமார் 50 ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சியே நடைபெற்று வந்தது. மக்கள் போராட்டம் தீவிமடைந்த நிலையில் கடந்த 2015இல் அங்குப் பொதுத்தேர்தல் நடந்தது.

அதில் ஆங் சான் சூச்சி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் சட்டச் சிக்கல்கள் காரணமாக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த ஆங் சான் சூச்சியால் அதிபராகப் பதவியேற்க முடியவில்லை.

மியான்மர்

இதையடுத்து அவரது நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான டின் கியாவ் அதிபராகப் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகர் பதவி ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 2020 நவம்பர் மாதம் அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது. அதிலும் ஆங் சான் சூச்சி கட்சியே மாபெரும் வெற்றி பெற்றது. இருப்பினும், இத்தேர்தலில் மோசடி நடந்துள்ளதால் தேர்தலை ஏற்க முடியாது என்று அறிவித்த அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் ஆட்சியைக் கவிழ்த்தது.

ஆங் சான் சூச்சி

மேலும், ஆங் சான் சூச்சி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மியான்மர் ராணுவத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

ராணுவம் அறிவிப்பு

அப்போது மியான்மர் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சொத்துக்களைக் கையகப்படுத்துவதாகவும், போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களைக் கைது செய்வோம் என்றும் அறிவித்தது. மேலும், இதைத் தொடர்ந்து பல வீடுகளில் சோதனைகள் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களைக் கைது செய்தும், அவர்கள் குடும்பத்தினரின் சொத்துகளை ஜப்தி செய்தும் நடவடிக்கை எடுத்தது மியான்மர் ராணுவம். இது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடவடிக்கை

இருப்பினும், இளைஞர்கள் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனால் எங்குக் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில், பல பெற்றோரும் தங்களும் தங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் இப்படி 500க்கும் மேற்பட்டவர்கள் கைது மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

ராணுவம் விளக்கம்

மியான்மரில் கடந்த கால ராணுவ ஆட்சியிலும் இதுபோல பெற்றோர் இதுபோல போராட்டத்தில் ஈடுபடும் பிள்ளைகளுக்கும் தங்களும் தொடர்பு இல்லை என அறிவித்துள்ளனர். ஆனால், அப்போது சில பெற்றோர் மட்டுமே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் இப்போது அது மல மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படி தொடர்பு இல்லை என அறிவித்த பின்னரும் கூட போராட்டக்காரர்களுக்கு உதவியது தெரிய வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று மியான்மர் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தொடரும் மோதல்

கடந்த ஓராண்டு மேலாக மியான்மரில் ராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த போராட்டத்தால் பாதுகாப்புப் படை சுமார் 1,500 பேரைக் கொன்றுள்ளது. மேலும், 12,000 பேரைக் கைது செய்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தத் தகவல்களை மியான்மர் ராணுவம் தொடர்ந்து மறுத்தே வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours