சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அகாடமி ஆஃப் இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் 16 – வகையாக விளையாட்டுப் போட்டிகளில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது…
மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அகாடமி ஆஃப் இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக 16 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொழிலதிபரும், திமுக நிர்வாகியுமான விமல் துவக்கி வைத்து சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
போட்டியில் சேலம், கரூர், நாமக்கல், திருவாரூர், காரைக்குடியை சேர்ந்த 500 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் கண்களைக் கட்டிக்கொண்டு 6 மணி நேரம் சிலம்பம் சுற்றுதல், முழந்தாளிட்டு இரு கண்களையும் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுதல், அடுக்கி வைக்கப்பட்ட 5 மண்பானைகளுக்கு மேல் நின்று சிலம்பம் சுற்றுவது, இரு கண்களையும் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் கீபோர்டு வாசித்தல், கட்டை காலில் நின்று கொண்டு பத்து மணி நேரம் சிலம்பம் சுற்றுவது, 1,330 திருக்குறள்களை வரிசையாக 80நிமிடங்களில் கூறுவது, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ராசிபுரத்தில் சேர்ந்த பன்னீர் (40), என்பவரது மார்பில் 60 கிலோ எடைகொண்ட உரல் கல்லை வைத்து அதில் நவதானியங்களை போட்டு உலக்கை கொண்டு இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்மநாபன் (30) என்பவர் தண்ணீர் நிரப்பிய பித்தளை குடத்தை பல்லால் தூக்கி சிலம்பம் சுற்றி அசத்தினார். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகாடமி ஆஃப் இந்தியன் மார்சில் ஆர்ட்ஸ் நிறுவனர் பாரதிராஜா, துணைச் செயலாளர் வினோத்குமார், தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சேகர் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours