கொங்கு மண்டல தளபதி! செந்தில்பாலாஜிக்கு புதிய அடைமொழி சூட்டிய கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு.!

Estimated read time 1 min read

கோவை:

கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சூட்டப்பட்டுள்ள புதிய அடைமொழி தான் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ”கொங்கு மண்டல தளபதி அமைச்சர் செந்தில்பாலாஜி” என ஜல்லிக்கட்டில் நிமிடத்துக்கு நிமிடம் மைக்கில் அலறவிடப்பட்டது. தன்னை கொங்கு மண்டல தளபதி என ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மைக்கில் கூறியபோது அதனை அமைச்சர் கவனித்தாரா அல்லது கவனித்தும் ரசித்தாரா எனத் தெரியவில்லை.

கோவை செட்டிப்பாளையம்

கோவை செட்டிப்பாளையத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முழுமையாக அங்கேயே இருந்து அமைச்சர் மூர்த்தி பாணியை கடைபிடித்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்ககாசுகளை பரிசாக அள்ளிக்கொடுத்தார். அப்போது அவரை புகழும் வண்ணம், ”கொங்கு மண்டல தளபதி அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கும் பரிசு” என்றே விழாக் குழு சார்பில் அடைமொழியுடன் அழைக்கப்பட்டது.

அமைச்சர் பேச்சு

தன்னை கொங்கு மண்டல தளபதி என விழாக் குழுவினர் அழைத்த போதெல்லாம் அமைச்சர் செந்தில்பாலாஜி அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக யமஹா பைக்கும், மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்கக்காசும் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.

முக்கிய நிர்வாகிகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னின்று நடத்திய இந்த கோவை செட்டிப்பாளையம் ஜல்லிக்கட்டில் கோவை முக்கிய திமுக நிர்வாகிகள் பலரும் மிஸ்ஸிங். கமல் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன், அருகாமை மாவட்டமான திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகியான ஜெயராமகிருஷ்ணன், கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோர் மட்டுமே அங்கு இருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக் பட்டும் படாமலும் மேடையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் பாதி, என பல பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் கோவை மாவட்டத்துக்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை, கொங்கு மண்டல தளபதி என அழைக்கப்பட்டிருப்பது தான் இப்போது கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours