திருவனந்தபுரம்:
கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலிருந்து பேராயர் பிரான்கோ முல்லக்கல்லை கோட்டயம் நீதிமன்றம் விடுவித்துள்ளது. வழக்கில் போதிய ஆதாரங்கள் வலுவாக இல்லாததால் பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவிப்பதாக கோட்டயம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பேராயர் பிரான்கோ முல்லக்கல் மீது கோட்டயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைதும் செய்தது.
நாட்டிலேயே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் பேராயர் என்ற பட்டத்தை பெற்றவர் பிரான்கோ முல்லக்கல். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்ட பேராயராக இருந்த இவர், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் கோட்டயம் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளானார். மேலும், பேராயர் குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கேரள மாநிலம் கோட்டயம் கூடுதல் சிறப்பு நீதிமன்றம், கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவித்து உத்தரவிடுள்ளது. பிரான்கோ மீது முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாகவும் புகாருக்கான ஆதாரங்கள் வலுவாக இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை கேரளாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.பேராயர் முலக்கல்லுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தபோது, கேரளாவில் அதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours