மதுரை:
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் (எ) ராஜா (26). இவர் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கடந்த 2020ல் ஏம்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் விசாரித்து, கடந்தாண்டில் சாமிவேலுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஏம்பல் டிஎஸ்பி தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. இதேபோல் தண்டனையை எதிர்த்து, சாமிவேல் தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமதுஜின்னா ஆஜராகி, ‘‘7 வயது சிறுமியை, கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். போதுமான சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதில், தலையிட வேண்டியதில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சாமிவேலின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, புதுக்கோட்டை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
+ There are no comments
Add yours