சென்னை:
பண மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள ராஜேந்திர பாலாஜி குறித்தும் அவர் பிடிக்கப்பட்ட விதம் குறித்தும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் கிளம்பின.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தலைமறைவு
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் திடீரென தலைமறைவானார்
கைது
அவரை பிடிக்க மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து பல நாட்கள் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே இருந்தார். அவரை பிடிக்க டெல்லிக்கும் கூட சென்றது தனிப்படை. இதற்கிடையே அவர் முன் ஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு ஜன.6 விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜன. 5இல் அவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சிறை
சுமார் 3 வாரங்களாகத் தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருச்சி மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் இருக்குமிடம் குறித்த தகவல் கடந்த ஜன.2ஆம் தேதியே தனிப்படைக்குக் கிடைத்துவிட்டதாம்.
சுங்கச்சாவடி சிசிடிவி
அன்றைய தினம் காரின் முன்சீட்டில் அமர்ந்தவாறு பயணித்த ராஜேந்திர பாலாஜியின் படம் சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்போதே தனிப்படைக்குக் கிடைத்துவிட்ட போதிலும் அவரை 3 நாட்கள் கழித்தே தனிப்படையால் கைது செய்ய முடிந்துள்ளது. கைதிற்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வரும் ஜன. 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னரே அவர் திருச்சி அழைத்துச் செல்லப்பட்டார்.
வழக்கறிஞர்
திருச்சி சிறையில் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை வழக்கறிஞர் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதியில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் இதுவரை அவரை சிறையில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் அவரது வழக்கறிஞர் திருச்சி சிறையில் ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி தற்போது நலமாக உள்ளதாகவும் தைரியமாகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேதாஜி
மேலும், ஓய்வு நேரங்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் தன்னை சிறையில் சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகங்கள் கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார். சிறையில் தனிமையில் இருக்கும் நேரங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புத்தகங்களைப் புரட்டியபடியே நேரத்தைக் கழிக்கிறாராம் ராஜேந்திர பாலாஜி!
+ There are no comments
Add yours