‘தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கியோருக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது’!: ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி

Estimated read time 1 min read

சென்னை:

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கியோருக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரம்பிக்குளம் – ஆழியார் திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் திருட்டு தனமாக எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே தனிப்பட்ட நபர்கள் இரண்டு பேருக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கி பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள  ஆதர அமைப்பு ஆகியவை உத்தரவிட்டதை எதிர்த்து அத்திட்டத்தின் முன்னாள் நிர்வாகி பரமசிவம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அதை சட்டவிரோதமாக எடுப்பது தவறு. இதனால் பிறருக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது.


சில நபர்களுக்கு கிடைக்காமல் போகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்த போது நீர்வள  ஆதர அமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் பறக்கும்படைகள் அமைத்து தண்ணீர் திருட்டை தடுத்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதேசமயம் தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கியோருக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் – ஆழியார் திட்ட கால்வாயிலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை நீதிபதி சுட்டிக்காட்டி அதை தடுப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான விளக்கத்தை ஜனவரி 25ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours