2022ம் ஆண்டு இந்தியாவில் 5ஜி இணைய சேவை
நடைமுறைக்கு வரும் எனவும் முதல்கட்டமாக
13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும்
எனவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் செல்ஃபோன்
பயனர்கள் தற்போது 4ஜி சேவையை தான்
பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம்
அதிவேக இணைய வசதி, தடையற்ற
வீடியோ ஸ்டிரீமிங், துல்லியமான வீடியோ
கால்கள் போன்ற என்னற்ற வசதிகள்
சாத்தியமாகின. இந்நிலையில் 5ஜி இணைய
வசதி, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக
உருவெடுத்திருக்கிறது.
உலக நாடுகள் சிலவற்றில் 2019ம் ஆண்டு முதலே
பயன்பாட்டில் இருந்து வரும் 5ஜி சேவையானது
இந்தியாவில் வரும் 2022ம் ஆண்டு நடைமுறைக்கு
வரும் என தொலைத்தொடர்பு அமைச்சகம்
தெரிவித்திருக்கிறது.
5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை இணைய
சேவையானது 4ஜியை காட்டிலும் பல மடங்கு வேகம் கொண்டதாகும். பதிவிறக்க மற்றும்
பதிவேற்ற வேகமானது நொடிக்கு 10 ஜிகாபிட்
என்ற அளவில் இருக்கும். இதன் மூலம்
தொலைத்தொடர்பு, தொழில்துறை, ஆராய்ச்சி,
கல்வி, என பல்வேறு துறைகளும் அபரிமித
வளர்ச்சி பெரும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 2018ம் ஆண்டு முதலே 5ஜி
சோதனைகளை தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
நடத்தி வருகின்றன. இதனையடுத்து எதிர்வரும்
2022ம் ஆண்டில் 5ஜி சேவை இந்தியாவில்
நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக
அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முதற்கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை
கருத்தில் கொண்டு 13 இந்திய நகரங்களில்
5ஜி சேவை தொடங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை,
பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத்,
சண்டிகர், காந்திநகர், ஹைதராபாத், ஜாம் நகர்,
லக்னோ, குருகிராம், புனே மற்றும் மும்பை ஆகிய
நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என
கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட 13 நகரங்களில் ஜியோ, ஏர்டெல்
மற்றும் விஐ (Vodafone Idea) ஆகிய
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி
சோதனையை நடத்தி வருகின்றன. டிசம்பர் 31ம் தேதி இந்த சோதனை நிறைவு பெற இருக்கிறது.
அதே நேரத்தில் வணிக ரீதியாக எந்த நிறுவனம்
முதலில் 5ஜி சேவையை வழங்க உள்ளது
என்பதை தொலைத்தொடர்பு அமைச்சகம்
தெரிவிக்கவில்லை.
4ஜி மொபைல்கள் 5ஜி சேவையில் பயன்படுத்த
முடியாது, 5ஜி வசதி கொண்ட மொபைல்களில்
மட்டுமே இச்சேவையை பயன்படுத்த முடியும்
என்பது குறிப்பிடத்தகுந்தது.
+ There are no comments
Add yours