சென்னை:
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் சுமார் ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்தன. ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை என அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்கள் திறக்கப்பட்டன.
வேகமாக பரவிய செய்திகள்
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்புக்கள் நடந்து வருகின்றன. தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்துள்ளது. ஆண்டுதோறும் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக ஏற்கனவே பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது என்று செய்திகள் வேகமாக பரவி வந்தன.
ஆசிரியர் சங்கம் கோரிக்கை
கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இதர பணிகளை மேற்கொண்டனர் என்றும் அரையாண்டு விடுமுறை வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களின் விருப்பம் எனவும் தமிழக அரசு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது.
நாளை மறுதினம் முதல் விடுமுறை
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அரையாண்டு குறித்து கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘ பள்ளிகளுக்கு நடப்பாண்டு அரையாண்டு விடுமுறை உண்டு. நாளை மறுதினம்(25-ம் தேதி) முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் குஷி
மேலும், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்கப்படும் என்றும் பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகல்வித்துறை அமைச்சரின் விடுமுறை அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours