சேலம்;

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி காந்தி நகரில் உள்ளது. இங்கு 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 9-ம் வகுப்பில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன.

இந்த 6 வகுப்பறைகளிலும் படிக்கும் 300 மாணவிகளின் வருகை பதிவேட்டில், அவர்களின் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி மாணவிகளுக்கு தெரியவரவே அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பொன்முடியிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர். உடனே இது தொடர்பாக அவர் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்காக வருகை பதிவேட்டில் கணக்கெடுக்கும் வகையில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் தெரியவந்தது. அலுவலக பயன்பாட்டுக்காக

தகுதியான மாணவிகள் பட்டியல் தயாரித்தது மட்டுமே சாதி பெயர் அதில் குறிப்பிடப்பட்டு
இருந்ததாக ஆசிரிய- ஆசிரியைகள் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து மாணவிகளின் வருகைப்பதிவேட்டில் இருந்து சாதி பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது உடனடியாக நீக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *