மதுரை;
விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சரவணன் என்ற காவலர் உயிரிழப்பு, படுகாயமடைந்த கண்ணன் என்ற மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதி.
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (22-12-2021) அதிகாலை, மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு பாதுகாப்புப் பணிக்குச் சென்றபோது, கீழவெளி வீதியில் உள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், அதோடு மட்டுமல்லாமல் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு தலைமைக் காவலரான கண்ணனுக்கு 5 இலட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours