சென்னை:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர் கதையாக நடந்து வருகிறது, இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பலன் இல்லை.
இலங்கை கடற்படை
இந்தச் சூழலில் கடந்த சனிக்கிழமை முறையாக ஒப்புகை சீட்டு பெற்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இருப்பினும், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 42 ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களின் விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
68 மீனவர்கள்
இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் மேலும் 25க்கும் மேற்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மொத்தம் 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் கடிதம்
இதனிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கவும் 75 மீன்பிடி படகுகளை மீட்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதை திமுக எம்பிகள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில் வழங்கினர்.
முதல்வர் ஸ்டாலின்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.12.2021) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடந்த 19.12.2021 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்படம் பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளை மீட்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தொலைப்பேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டுக்கொண்டார்.
அச்சமூட்டும் தாக்குதல்கள்
அதற்குள் மீண்டும் 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள்/தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதைத் தடுத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி, பாக் ஜலசந்தியில் மீன்பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும், மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பதும் நமது கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை தேவை
மேலும், கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கவும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடமிருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முதல்வர் எழுதிய இக்கடிதத்தை நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தினர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொலைப்பேசி
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின், மீனவர்கள் விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours