கரூர் அருகே.. பள்ளிக்கு கேக், மத புத்தகங்களுடன் வந்த போதகர்.. காரை உடைத்து கொந்தளித்த பிற மதத்தினர்!.,

Estimated read time 1 min read

கரூர்:

கரூர் மாவட்டத்தில் காரில் வந்த கிறித்தவ அமைப்பினர் அங்கிருக்கும் பள்ளி மாணவர்களிடம் மதப் பிரச்சாரம் செய்வதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தனியார் பள்ளி மாணவர்களை தனியே அழைத்து கிறித்துவ மதம் சார்ந்த புத்தகங்களை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தகவல் அறிந்து திரண்ட கிராம மக்கள் கார் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

மதப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார்

கரூர் மாவட்டத்தில் கிறித்தவ மதத்தை சார்ந்த போதகர்கள் அடிக்கடி வந்து அங்கிருக்கும் மாணவர்களிடம் மதமாற்றம் செய்யும் வகையில் பிரச்சாரங்கள் செய்து வருவதாக அவ்வப்போது பிற மதத்தினரிடையே இருந்து விமர்சனங்கள் வருவது வழக்கம்.இந்நிலையில் கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் கிராமத்தில் காரில் வந்த சில மதபோதகர்கள் அங்கிருக்கும் தனியார் பள்ளி மாணவர்களிடம் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

காரின் மீது தாக்குதல்

காரில் வந்த 2 பெண்கள் உள்பட 5 பேரும் மாணவர்களுக்கு கேக் மற்றும் கிறித்துவ போதனைகள் அடங்கிய புதிய ஏற்பாடு, சங்கீதம், நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரு சில மாணவர்கள் அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல பெற்றோர் அதை பார்த்து கோபம் அடைந்தனர். இந்த தகவல் கிராம மக்களுக்கு தீயாய் பரவ அனைவரும் புறப்பட்டு தனியார் பள்ளி அருகே நின்றிருந்த கிறித்துவ போதகர்களை முற்றுகையிட்டனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு சிலர் காரின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

விசாரணைக்கு அழைத்து சென்றனர்

பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இருதரப்பினரிடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மதமாற்றம் செய்ய வந்ததாக கூறப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தனர். கிறித்துவ மதபோதகர்கள் 5 பேரையும் பேரையும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

மேலும் ஒரு சம்பவம்

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து அங்கு கல்வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. பள்ளியில் குவிந்த இந்து அமைப்பினர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பள்ளிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதே நடைபெற்ற இச்சம்பவத்திற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கரூரில் தனியார் பள்ளி மாணவர்களை குறிவைத்து மதமாற்றம் செய்வதாக புகார் வந்திருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours