கோவை;
கோவை அருகே 5 நாள்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளிச் சிறுமியின் சடலம் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில், ஒரு சாக்கு மூட்டையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை அருகே இன்று மதியம் முட்புதரில் சாக்குமூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் ஐந்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி சிறுமியினுடையது என்பது தெரியவந்துள்ளது. காணாமல் போன சிறுமி கோவை அருகே தனது தாய், பாட்டி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் தாய், பாட்டி மற்றும் சகோதரி காலை 10 மணிக்கு பணிக்குச் சென்றுள்ள நிலையில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தங்கியுள்ளார். 11-ம் தேதி மாலை 4 மணிக்கு தாய் வீடு திரும்பியபோது சிறுமி வீட்டில் இல்லாததை கண்டு தேடியுள்ளார். இது தொடர்பாக கடந்த 13-ம் தேதி அனைத்து மகளிர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமி காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று சரவணம்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன சிறுமி தான் என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். சிறுமி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாறியுள்ளதால் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours