சேலம்:
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது. பாமக உடன் கூட்டணி வைத்ததால்தான் தென் மாவட்டங்களில் தோற்றதாக ஒரு தரப்பினரும், பாமகவுடன் கூட்டணி வைத்ததால்தான் வடமாவட்டங்களில் ஓரளவு அதிமுக வெற்றி பெற முடிந்தது என அதிமுகவிலேயே இரு வாதங்கள் முன்வைக்கப் பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸின் நீண்ட நாள் கோரிக்கையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. பல கட்ட தடைகளுக்கு பிறகு நடைமுறைப் படுத்தப்பட்டாலும் நீதிமன்ற உத்தரவால் தற்போது அந்த இட ஒதுக்கீடு தடை செய்யப்பட்டுள்ளது ..
அதிமுக – பாமக கூட்டணி உடைந்தது
இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போது பேசிய ராமதாஸ் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை எனவும், கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் எதிர்த்துப் போட்டியிட்டனர் என கூறினார். மேலும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் முறையிட்டபோது அவரால் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், சொந்தக் கட்சியினரே கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி வைத்தால் நம்மால் எப்படி வெல்ல முடியும் என கூறியிருந்தார் .
ராமதாஸ் விமர்சனம்
பாமகவால் கூட்டணி கட்சிகள் பலம் அடைந்தன, ஆனால் கூட்டணியால் பாமாவுக்கு எந்த பலனும் இல்லை எனவும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில் அதிமுக உடன் கூட்டணி தொடரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்து போட்டி என பாமக தலைவர் ஜிகே மணி கூறியிருந்தார். இந்த நிலையில் தான் சட்டமன்றத்தில் திமுகவின் அறிவிப்புகளை பாராட்டி கூட்டணிக்கு துண்டு போட்டு வைத்த பாமக அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி , பாமகவினருக்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என்பதை ராமதாஸ் தான் தெரிவிக்க வேண்டும் எனவும், என்ன துரோகம் என்பதை சொன்னால்தான் தங்களால் பதில் அளிக்க இயலும் என்றும் கூறினார்.
கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை
மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகியதாக பாமகவினர் கூறியுள்ள நிலையில் வேறு கேள்விகள் எழ வாய்ப்பில்லை எனவும், தேர்தலில் போட்டியிடும் பொது மக்கள்தான் வாக்களிக்க வேண்டும் வேறு யாரும் வாக்களிக்க முடியாது எனவும், அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை எனவும் திமுகவை ஆதரித்து இருப்பதன் மூலம் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை எனவும் எடப்பாடி பழனிசாமி பாமகவை கடுமையாக விமர்சித்தார்.
+ There are no comments
Add yours