புதுக்கோட்டை:
மழையால் தண்ணீர் சூழ்ந்த பகுதியை சீரமைக்க மொபைல் போனில் பேசிய பெண்ணின் கோரிக்கையை உடனடியாக வந்து நிறைவேற்றிய அமைச்சரை பொதுமக்கள் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாடிமுத்து, 30; பைக் மெக்கானிக். மனைவி மகாலட்சுமி, 28. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது, பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, வீடு முழுதும் தண்ணீர் சூழ்ந்து, வீட்டிற்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து மகாலட்சுமி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு மொபைல்போனில், நேற்று மதியம் கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின் பொக்லைன் இயந்திரம் வாயிலாக நீர்வழிப் பாதைகளை சரிசெய்து, வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுத்தார். மேலும் கூரை வீட்டிற்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு, தகவல் அளித்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினார். அமைச்சரின் உடனடி நடவடிக்கையை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
+ There are no comments
Add yours