சென்னை:

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிரான விமர்சனம் இப்படி ஜாதி ரீதியான பிரச்சனையாக மாறும் என்று சூர்யா நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார் என்கிறார்கள். ஜெய்பீம் படத்தில் செங்கேனியாக சித்தரிக்கப்பட்டிருந்த பார்வதியை நேரில் சென்று சந்தித்து நிதி உதவி அளிக்கவே சூர்யா திட்டமிட்டிருந்தார், ஆனால் காவல்துறை தரப்பில் பாதுகாப்பு காரணங்களை கூறி அதற்கு தடை விதித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

ஜெய்பீம்

ஜெய்பீம் வெளியான போது கிடைத்த வரவேற்பு ஒரு கட்டத்தில் சூர்யாவை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. துவக்கத்தில் படத்தை படமாக மட்டுமே அனைவரும் பார்த்தனர். ஆனால் சில இடதுசாரி மற்றும் பெரியாரிய இயக்கங்கள் ஜெய்பீம் படத்தை கொண்டாடுவதாக கூறி சில தேவையற்ற கருத்துகளை கூறிய போது தான் பிரச்சனை ஆரம்பமானது. அதிலும் ஜெய்பீம் படத்தில் கொடூர காவல்துறை அதிகாரி வீட்டில் அக்கினி கலசத்துடன் கூடிய 1995ம் ஆண்டு காலண்டர் இருந்தது தான் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதனை சில வன்னிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டியதுமே தயாரிப்பு நிறுவனம் திருத்திக் கொண்டது.

அந்தோனிசாமி பெயர் சர்ச்சை

ஆனால் கொடூர காவல்துறை அதிகாரியான அந்தோனிசாமி பெயரை குரு என மாற்றி வைத்தது ஏன் என்கிற கேள்வி தான் பாமகவை இந்த பிரச்சனையில் நுழைய வழிவகுத்தது. அன்புமணி சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதும் முன்பே, அக்கினி கலச காலண்டர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் கொடூர காவல்துறை அதிகாரியின் பெயர் குருவாகவே தற்போதும் நீடிக்கிறது. இதனை அடுத்தே பெயர் அரசியல் வேண்டாம் என்று சூர்யா பதில் அளித்திருந்தார். ஆனால் சூர்யா அன்புமணிக்கு எழுதிய கடிதங்களில் சில வார்த்தைகள் அன்புமணியை சீண்டும் வகையில் இருந்தது.

பாமக கோபம்

இதனால் தான் பாமக இந்த பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. வன்னியர் சங்கம் மூலமாக பாமக சூர்யாவுக்கு செக் வைத்த நிலையில், மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, சூர்யாவை உதைப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்ததும் பிரச்சனை வீரியமானது. இதனை பாமக தலைமை கண்டிக்கவில்லை. இதனை அடுத்து சூர்யா நடிக்கும் படங்களை இனி சேலத்தில் திரையிட முடியாது என அக்கட்சியின் எம்எல்ஏ பகிரங்கமாக எச்சரிக்க ஆரம்பித்தார். பிறகு பாமக தொண்டர்கள், வன்னிய இளைஞர்கள் சூர்யாவை தங்கள் ஊருக்கு வந்தால் அடிக்கப்போவதாக கூறினர்.

சூர்யாவிற்கு ஆதரவு எப்படி?

இந்த பிரச்சனையில் சூர்யாவிற்கு திரைத்துறையில் சொற்பமான நபர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் மவுனமாக உள்ளனர். இதே போல் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் எப்போதுமே பாமகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் தான். எனவே இவர்கள் ஆதரவால் பெரிய அளவில் சூர்யாவிற்கு சாதகமான விஷயங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதே சமயம் சூர்யா வன்னியர்களுக்கு எதிரானவராக சித்தரிக்கும் போக்கு அதிகமானது.

கைவிட்ட கொங்கு அமைப்புகள்

இதனால் சூர்யா சார்ந்த கொங்கு கவுண்டர்கள் தரப்பில் இருந்து அவருக்கு ஆதரவாக அறிக்கையோ பேட்டியோ கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் இந்த விஷயத்தில் சூர்யாவிற்கு ஆதரவாக நிற்க கொங்கு அமைப்புகள் முழுவதுமாக மறுத்துவிட்டன. பொதுவாக இந்த விஷயங்களில் பாமகவிற்கு எதிராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கூட மவுனமாக உள்ளார். தங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒரு மிகப்பெரிய நடிகர், ஏராளமான அறக்கட்டளை பணிகளை செய்பவர், ஆனால் அவரை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சிலர் மிரட்டும் நிலையில் கொங்கு அமைப்புகள் நிச்சயம் பதிலடி கொடுக்கும் அல்லது சூர்யாவிற்கு அரணாக நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிவக்குமார் அப்செட்

ஆனால் பிரச்சனையை சூர்யா தான் பெரிதாக்கிவிட்டதாக கொங்கு அமைப்புகளிடம் இருந்து பதில் கிடைத்துள்ளன. இது சூர்யாவின் தந்தை சிவக்குமாரை மிகவும் அப்செட்டாக்கியதாக சொல்கிறார்கள். இதே போல், ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். ஆனால் சூர்யாவுக்கு பாமக தரப்பில் இருந்து மிரட்டல் வந்த நிலையில், முதல்வரோ அல்லது அமைச்சர்களோ தற்போது வரை வாய் திறக்கவில்லை. வழக்கமாக இந்த மாதிரி விஷயங்களில் பாமகவிற்கு எதிராக களமாடும் தருமபுரி எம்பி செந்தில் கூட சூர்யாவிற்கு ஆதரவாக பேசவில்லை.

திமுகவும் சைலன்ட்

மேலும் சூர்யாவிற்கு மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் மீது வழக்கும் கூட தாமதமாகவே பதிவு செய்யப்பட்டது. அவர் மீது அதன் பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் சூர்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டால் வன்னியர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று திமுக கருதுவது தான் என்கிறார்கள். இப்படி கொங்கு அமைப்புகளும் கை விரித்த நிலையில் திமுகவும் கப்சிப் என ஆனதால் தான் ட்விட்டரில் தானாக களம் இறங்கி தனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சூர்யா நன்றி தெரிவித்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *