திருச்சி:
திருச்சி மன்னார்புரம் மேம்பால கட்டுமானப் பணிகளுக்காக ராணுவம் கொடுத்துள்ள அரை ஏக்கர் நிலத்துக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் கொடுக்கும் விளம்பரங்கள் தாறுமாறாக உள்ளது. இந்த விளம்பரங்களை பார்க்கும் பொதுமக்களுக்கு இது என்னடா ராணுவத்துக்கு வந்த சோதனை என நினைக்கத் தோன்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பேசி மேம்பாலப் பணிகளுக்காக ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை யார் பெற்றுக்கொடுத்தது என்பது தான் திருச்சி அரசியல்வாதிகளுக்கு இடையே போட்டி.
திருச்சி மாநகரம்
திருச்சி ஜங்ஷனில் இருந்து சென்னை பைபாஸ் சாலையை இணைக்கக்கூடிய மன்னார்புரம் என்ற இடத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், ராணுவத்துக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலம் குறுக்கே வந்ததால் அந்தப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணி நிலுவையில் இருந்த நிலையில், இப்போது மேம்பாலம் கட்டிக்கொள்வதற்காக அரை ஏக்கர் நிலத்தை ராணுவ உயரதிகாரிகள் மனமுவந்து கொடுத்திருக்கின்றனர்.
யார் முயற்சி?
இதையடுத்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முயற்சியால் தான் ராணுவம் நிலம் கொடுத்ததாக கூறி அவரது ஆதரவாளர் நன்றி தெரிவித்து பேனர் வைக்கத் தொடங்கினர். விடுவோமா நாங்கள் என்கிற ரீதியில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், அமைச்சரின் தொடர் முயற்சியால் தான் ராணுவம் நிலம் கொடுத்ததாக கூறி அவர்கள் பங்குக்கு சுவரொட்டிகளும், பேனர்களும் நன்றி தெரிவித்து வைத்துள்ளனர்.
போக்குவரத்து
இந்த களேபரங்களுக்கு மத்தியில் அதிமுகவும் இந்த விவகாரத்தில் உரிமைக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. இதனால் திருச்சி அரசியல்வாதிகள் கொடுக்கும் இந்த பில்டப்களை பார்க்கும் போது தாங்க முடியலடா சாமி என்கிற நடிகர் விவேக்கின் நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருவதாக கூறுகிறார்கள் பொதுமக்கள். ஜங்ஷன் மன்னார்புரம் இடையே மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours