கண்ணீரில் “டெல்டா”.. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

Estimated read time 0 min read

தஞ்சை:

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். கடந்த வாரம் முழுவதும் சென்னை கனமழையின் வசம் சிக்கி கொண்டது.. ஏராளமானோர் மழையால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.. தொடர்ந்து 5 நாட்களுக்கும் இந்த ஆய்வை நேரடியாகவே மேற்கொண்டார். பல்வேறு நிவாரண உதவிகளை செய்தார்.

செங்கல்பட்டு

நேற்றுகூட செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 6வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த, 33 குடும்பங்களுக்கு கீழக்கோட்டையூர் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.. முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்… ஆய்வுக்கு சென்ற வழியில், கீழக்கோட்டையூரில் உள்ள டீ கடையில் டீ குடித்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார், அடையாறு ஆறு துவங்கும் இடம், மண்ணிவாக்கம் பகுதி, அடையாற்று பாலத்தில், கன மழையால் ஏற்பட்டு உள்ள நீர் வரத்தை ஆய்வு செய்தார்.. தாம்பரம் பஸ் ஸ்டேண்டில் மழை பாதிப்புகளை பார்வையிட்டதுடன், துாய்மை பணியாளர்களிடம், தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார். இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று 6வது நாளாக ஆய்வு செய்ய உள்ளார்.

புதுச்சேரி

அதன்படி இன்று காலை முதல்வர், புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடச் செல்கிறார்… காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார்.

டெல்டா மக்கள்

அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் ஆய்வு மேற்கொள்கிறார். இதையடுத்து டெல்டா மாவட்ட மக்கள், தங்கள் மாவட்ட பிரச்சனைகளை முதல்வரிடம் நேரடியாக சொல்ல தயாராகி வருகின்றனர்.

மாவட்டங்கள்

கடந்த தினங்களில், நாகை, திருப்பூண்டி, திருவாரூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.. நாகையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.. திருவாரூர் மாவட்டத்திலும், 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் நிலத்தில் மூழ்கிவிட்டன.. தஞ்சை மாவட்டத்திலும் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வயல்களில் தண்ணீர் நிரம்ப தேம்பி உள்ளது..

நம்பிக்கை

இப்படி ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலாக அளவில் பயிர் நீரில் மூழ்கிவிட்டன.. இதில், பெருமளவு இளம் நாற்றுகளாம்.. அவைகள் கண்ணெதிரே நீரில் அழுகி வருவதை பார்த்து விவசாயிகள் கதிகலங்கி கண்ணீர் விடுகின்றனர். இதைதவிர, தொடர் மழையும் வர உள்ளதால், அதை பற்றின பீதியும் கவலையும் அவர்களுக்கு சேர்ந்து கொண்டுள்ளது.. இந்நிலையில், முதல்வரின் நேரடி வருகை டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours