இயக்குநராக அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தின் மூலமே சூப்பர் ஹிட் கொடுத்த ஹெச்.வினோத் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை படைத்து இரண்டாவது படத்திலேயே கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். இதனையடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்திருந்தார்.
இதனையடுத்து அஜித்தோடு மூன்றாவது முறையாக துணிவு படத்துக்காக கை கோர்த்திருக்கிறார். இந்த படத்தையும் போனி கபூரின் பே வியூஸ் நிறுவனமே தயாரித்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் ரிலீசாக இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் படு மும்முரமாக முடிக்கப்பட்டு படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது படக்குழு.
இந்த நிலையில் இயக்குநர் ஹெச்.வினோத் இணையதள சேனல்களுக்கு அடுத்தடுத்து பேட்டியளித்து வருகிறார். அதில் துணிவு படம் குறித்தும், தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பல முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஹெச்.வினோத். அது குறித்தான வீடியோக்களும் பதிவுகளும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
குறிப்பாக க்ரைம் கதைக்களங்களை கையாள்வது குறித்து ஒரு சமூக அக்கறையோடு ஹெச்.வினோத் பேசியிருப்பது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதன்படி, “பேட்டி ஒன்றில், ‘நானும் லோகேஷ் கனகராஜூம் ஒரே நேரத்தில் கார்த்தியுடன் கைதி மற்றும் தீரன் பட வேலைகளில் இருந்தோம்’ என லோகேஷ் பேசியிருப்பார். அதன்படி ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் போல லோகேஷ் விஜய்யை வைத்தும், நீங்கள் அஜித்தை வைத்தும் படம் எடுக்குறீர்கள். இதுப்பற்றி..” என தொகுப்பாளர் கேள்வியை முன்வைக்கிறார்.
அதற்கு ஹெச்.வினோத், “எல்லாம் கண்ணோட்டம்தான். நான் பயங்கரமான கதைச்சொல்லியெல்லாம் கிடையாது. ஆனால் லோகேஷ் அப்படியே எனக்கு நேரெதிர். குறிப்பாக சமகால சினிமா ஐடியா கொண்டவர். அவருக்கு க்ரைம் உலகம்னா எனக்கு அந்த க்ரைமுக்கு பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கும். ஆகையால் ஒரே க்ரைம் உலகத்துக்குள் இரண்டு வெவ்வேறு கோணங்களில் வேலை செய்கிறோம்.
உதாரணமாக, தீரன் மாதிரி வலிமை படம் வரக்கூடாதுனு நினைச்சேன். ஏனெனில், தீரன் படத்தின் என்கவுண்ட்டர் காட்சிகள் வைக்கப்பட்ட போது சிலர் வருத்தப்பட்டாங்க. தீரன் படம் வெளியான நேரத்துல எங்கேயாவது ஒரு வடமாநிலத்தவரை அடிச்சுட்டாங்கனா அந்த சமயத்துல அது எனக்கு ரொம்ப பெரிய குற்றவுணர்ச்சியாகவே இருந்தது. தீரனில் வைக்கப்பட்ட காட்சி இன்ஃப்ளூயன்ஸ் ஆகிடுச்சோ என்ற எண்ணம் இருந்தது.
இது பற்றி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்னிடம், ‘நீ படம் எடுத்துட்ட, ஜெயிச்சுட்ட. ஆனால் எங்கேயே யாரோ ஒருத்தர் இதை பார்த்து அப்படியே செய்தா நீ பொறுப்பேத்துப்பியா’ என கேட்டார். இந்த கேள்வியெல்லாம் எனக்குள்ளேயே ஓடிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் வலிமை படத்தில் அஜித்தின் கேரக்டர் வந்தது. என்கவுன்ட்டருக்கு எதிராக பேசுவது, குற்றவாளிகளின் கை, கால்களை அடிச்சு உடைப்பதையெல்லாம் தவிர்க்கும் போலீசாக அர்ஜூன் குமார் கதாப்பாத்திரம் இருக்கும்.” என இயக்குநர் ஹெச்.வினோத் பேசியிருப்பார்.
#HVinoth clarity on handling crimes
His understanding of #Lokesh filmmaking in crime world.
He is very clear#Thunivu will be a big winner for sure pic.twitter.com/utvAkBbQfD— Alvin (@itsbruce18) January 7, 2023
அது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலரும், க்ரைம் காட்சிகளை கையாள்வதில் இப்படியொரு தெளிவா? என்றெல்லாம் குறிப்பிட்டு ஹெச்.வினோத் பேசியதை வைரலாக்கி வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours