சென்னை: திறமையான தகுதி வாய்ந்த நபர்களை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
சென்னையில் இயல்,இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு, முதல்வராக அவர் பொறுப்பேற்ற பிறகு இன்னும் கலைமாமணி விருதுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. விருதாளர்களும் தேர்வு செய்யப்படவில்லை. ஏனென்றால், இயல் இசை நாடக மன்றத்துக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. சில சட்டசிக்கல்கள் இருந்ததால், அதை செய்யவில்லை. எனவே இந்தச் சிக்கல் தீர்ந்த பிறகுதான், குழு அமைத்து கலைமாமணி விருதாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும்.
தமிழக அரசைப் பொறுத்தவரை, சரியான – திறமையான தகுதியான நபர்களைத்தான் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதேபோல், உயர் நீதிமன்றம் கூறியுள்ள வல்லுநர் குழுவை நிர்ணயம் செய்து, இதுவரை கலைமாமணி வாங்கியதில் தகுதியானவர்கள் மற்றும் தகுதியில்லாதவர்கள் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தகுதியில்லாதோருக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2019-2020-ஆம் ஆண்டில் கடந்த ஆட்சியில் வழங்கிய கலைமாமணி விருதுகள் தொடர்பாக புதிய தேர்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
+ There are no comments
Add yours