காடும் மலையும், அவை சார்ந்த கதையும் என்றால் பிரபு சாலமன் நினைவுக்கு வருவார். இந்தக் குறிஞ்சி நிலத்தின் அரும்பு `செம்பி’யின் மூலம் பிரபு சாலமன் சொல்ல வந்த உணர்வுபூர்வமான விஷயம் என்ன? அதைச் சரியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறாரா?
கொடைக்கானல் புலியூர் கிராமத்தில் வீரத்தாய் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி தன் பேத்தி சிறுமி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே பெற்றோரை விபத்தொன்றில் பறிகொடுத்த பேத்திக்கு எல்லாமுமாக இருப்பது பாட்டி வீரத்தாய் மட்டுமே. காட்டில் மலைத்தேனெடுத்து விற்று அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தன் பேத்தியைச் செல்லமாக வளர்க்கிறார். மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் மூன்று பெரிய இடத்து இளைஞர்களால் செம்பி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். காவல்துறையும் அவர்களுடன் நிற்க, வேறு வழியின்றி ஊரைவிட்டுக் கிளம்பி ஒரு பேருந்தில் ஏறுகிறார்கள் பாட்டியும் பேத்தியும். அவர்களுக்கான நீதியை அந்தப் பேருந்தும் அதிலிருக்கும் மனிதர்களும் எப்படிப் பெற்றுத் தந்தார்கள் என்பதே இந்த ‘செம்பி’.
படத்தில் பழங்குடியின மூதாட்டி வீரத்தாயாக பெயருக்கேற்றார்போல தைரியமான பாத்திரத்தில் வித்தியாச நடிப்பை வழங்கியிருக்கிறார் கோவை சரளா. பேத்திக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு வெடித்து அழும் காட்சியிலும், ஒரு அசாதாரணமான சூழலில் தன் பேத்தியைத் தோளில் சுமந்துகொண்டு மலைப் பாதையில் விறுவிறுவென நடக்கும் காட்சியிலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அந்த வயதான தோற்றத்துக்காக மேக்கப் மற்றும் பாடிலாங்குவேஜ் என மெனக்கெட்டு வீரத்தாயாகவே வாழ்ந்திருப்பதற்காக கோவை சரளாவின் உழைப்புக்கு சல்யூட்!
செம்பி பாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா என்ற சிறுமி கோவை சரளாவுக்கு இணையாக நடித்திருக்கிறார். மிகை நடிப்பில்லாமல் இயல்பாக நடித்திருப்பது படத்துக்கு பலம். பயத்தில் உடல் நடுங்கி பாட்டியோடு ஒட்டிக்கொண்டு அழும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். ஆனால் இவையெல்லாம் முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. பேருந்தில் பாட்டியும் பேத்தியும் ஏறியபிறகு மற்றவர்களின் திரை ஆக்கிரமிப்பில் இருவருக்கும் நடிப்பதற்கான வெளியே கிடைக்கவில்லை.
வழக்கமான பிரபுசாலமன் செட் பிராப்பர்ட்டிகளான தம்பி ராமையாவும் அன்பு என்ற ஒரு பேருந்தும், அவர் படங்களில் மட்டும் பயணிக்கும் சில பயணிகள் கேரக்டர்களும் இதிலும் அப்படியே இருக்கிறார்கள். காட்சிவழி எதையும் கடத்தாமல் பேச்சுக்கச்சேரியும் செயற்கையான காட்சிகளும் நம்ப முடியாத பாவனைகளும் எரிச்சலூட்டுகின்றன. போதாக்குறைக்கு நடுநடுவே தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் அடிக்கும் மொக்கை ஜோக்குகளைக் கேட்கும்போது ஓடும் அந்த பேருந்திலிருந்து இறங்கிவிடவே தோன்றுகிறது.
ஓடும் பேருந்துக்குள் இருந்துகொண்டே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கப் போராடும் வழக்கறிஞர் பாத்திரத்தில் அஸ்வின் குமார் நம்ப முடியாத சாகசங்களைச் செய்திருப்பது முழுக்க சினிமாத்தனம். மற்றபடி தன் பாத்திரத்துக்கான நியாயமான நடிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார். நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா பாத்திரங்கள் படத்தின் எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள். இருவரும் செயற்கையான நடிப்பை வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் கொட்டியிருக்கிறார்கள்.
படத்தின் பாடல்களைவிடப் பின்னணி இசையில் நிவாஸ் கே.பிரசன்னா தன்னை நிரூபித்தாலும் சில இடங்களில் தேவைக்கு மேல் இரைச்சலைக் கொட்டியிருக்கிறார். வனத்தின் வனப்பையும், மலையின் மகத்துவத்தையும் ஒளிப்பதிவாளர் ஜீவன் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
தப்பு செய்துவிட்டுத் தப்பிக்கப் பார்க்கும் அதிகார வர்க்கத்துக்கு காவல்துறை எப்படியெல்லாம் ஏவல்துறையாக மாறி துணை நிற்கிறது என்பதை முதல்பாதியில் வரும் காவல்துறையின் தேடுதல் வேட்டை நமக்கு உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறையே அவர்களைக் குற்றவாளியாய் சித்திரித்து விரட்டும் அவலத்தைக் காட்சிப்படுத்தியவிதம் அருமை. ஆனால், ஒரு போலீஸைத் தாக்கியதாலேயே அடுத்த சில மணிநேரங்களில் பாட்டியும் பேத்தியும் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்சேஷன் ஆகி, தீவிரவாதி ரேஞ்சுக்கு அவர்களை போலீஸ் படைகள் தேடுவதில் நம்பகத்தன்மையே இல்லை.
சாமானிய மக்களுக்கான கடைசி புகலிடம் நீதிமன்றங்கள்தான் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் இரண்டாம் பாதியை இன்னும்கூட நெகிழ்ச்சியும் யதார்த்தமுமாய் படமாக்கியிருக்கலாம். ஆனால் சரியாக செல்போன் டவர் கிடைக்காத கொடைக்கானல் வழித்தடத்தில் ஆளாளுக்கு ஒரு செல்போனை வைத்து புலனாய்வுப் புலிகளாக மாறுவது எதார்த்தத்தைத் தவறவிட்டு எரிச்சலைக் கூட்டுகிறது. டெலிகாம் ஆபரேட்டர், சைபர் க்ரைம் அதிகாரி, யூடியூபர் என ஒரு பஸ்ஸுக்குள்ளேயே எல்லாவித உதவிகளும் கிடைப்பது சுமாராக எழுதப்பட்ட நாடக டெம்ப்ளேட். போலீஸ்காரர்களால் ‘அன்பு’ பேருந்து எங்கே செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வில்லன்களின் அடியாட்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் பேருந்துக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல் நடத்துவதெல்லாம் எந்த ஊர் லாஜிக் சாரே?
தவிர்க்கப்பட வேண்டிய `கற்பழிப்பு’ என்ற வார்த்தை தாங்கிய பதாகைகளோடு வீதி நாடகம் நடத்துவதாகக் காட்டுவது இயக்குநரின் அரசியல் போதாமையைக் காட்டுகிறது. அதேபோல் பாலியல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட காட்சியைப் படமாக்கியவிதம் மற்றும் அவர்களின் கொடூர வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.
இப்படி போதாமைகளோடும் திரைக்கதை தடுமாற்றங்களோடும் படம் செல்வதால் படத்தின் நோக்கமே அந்தப் பஸ் பயணம் போலத் தடம்மாறி விடுகிறது. அதனாலேயே க்ளைமாக்ஸில் காட்டப்படும் போக்சோ நீதிமன்ற விசாரணையும் அது தரும் அதிர்வும் நம்மைப் பெரிதாய் உலுக்காமல் கடந்துபோகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து நேர்த்தியான படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை நாடகத்தனமாக்கி, கொஞ்சமும் ஜீவனில்லாமல் எப்படிப் படமெடுக்கக்கூடாது என்பதற்கு `செம்பி’ உதாரணமாகிவிட்டதுதான் பெரும் துயரம்.
+ There are no comments
Add yours