“நாடகத்தனமான சினிமாக்களை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பி வருகிறார்கள்!" – தங்கர்பச்சான்

Estimated read time 1 min read

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி. உதயகுமார், எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர் யோகி பாபு, கதாநாயகியாக அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து படத்தின் இயக்குநர் தங்கர்பச்சான், படத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை அதிதிபாலன் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது, ” கருமேகங்கள் கலைகின்றன படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இடையே சிறு தடங்கல் ஏற்பட்டது. பாரதிராஜா அவர்களுக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் பேனார். அவர் பூரண நலம் பெற்று வரும் வரை காத்திருந்து, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.

‘நான் பத்து படங்களுக்கு மேல் இயக்கியுள்ளேன். 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளில் பணியாற்றியுள்ளேன். இயக்கிய பத்து படங்களில் ‘நான் ஒரு கதையை எழுதிச் சொல்வேன், ஆனால் கடைசியாக அது வேறு படமாக வரும்’ அதற்குக் காரணம் நினைத்ததை படம் பார்க்கக் கூடிய சூழலும், சாத்தியக்கூறுகளும் இங்கு இல்லை. ஆனால் இந்தக் கதையில் அதுபோன்று நிகழக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். காரணம் இந்தப் படத்தில் சிறிதும் செயற்கைத்தனம் இல்லாத, புனைவு இல்லாத, நம்பகத்தன்மை இல்லாத ஒரே ஒரு காட்சிகள் கூட இதில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். ஒரு இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திரைப்பட கலையைக் கண்டுபிடித்து 110 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் செயற்கைத்தனமான மற்றும் நாடகத்தனமான சினிமாக்களை உருவாக்கி மக்களைத் திசைதிருப்பி வருகிறார்களே என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.

‘கருமேகங்கள் கலைகின்றன’ பட குழு

நான் இந்தக் கதையை 2006-ல் எழுதினேன். இதனை எப்படியாவது படமாக்க வேண்டும் என நினைத்தபோது அதற்கான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் எனக்கு அமையவில்லை. அப்போது திருச்சியில் உணவகம் நடத்திவரும் எனது நண்பரிடம் இப்படி ஒரு கதையை எழுதி படமாக்கக் காத்திருக்கிறேன் எனக் கூறினேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு நான் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் எனக் கூறினார். அப்படித்தான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம்.

இதில் ‘ராமநாதன்’ என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார். ‘வீரமணி’ என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். அவர் காமெடியன் என்ற பிம்பத்தை உடைத்து, துளியும் காமெடி இல்லாமல் முழுக்க முழுக்க கதையைத் தாங்கி நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.’ சார் இந்த படத்துக்கு நீண்ட நாட்கள் தேதி ஒதுக்க வேண்டும் என யோகிபாபுவிடம் கூறிய போது, `சார் நீங்க ஆரம்பிங்க சார், எவ்வளவு நாள் ஆனாலும் பரவால்ல நான் இந்த கதைல நடிக்கிறேன்னு’ சொல்லி ஆர்வமா நடித்துக் கொடுத்துள்ளார்.

அதேபோல் நான் கதை எழுதும் போது இரு கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை முடிவு செய்துவிட்டேன். அது இயக்குநர் பாரதிராஜா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன். இத்திரைப்படத்தில் ‘கோமகன்’ என்ற கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நீங்கள் அவரை பார்த்திருக்க மாட்டீர்கள். இக்கதைக்கு ஏற்ற நடிகையாக அதிதி பாலன் அமைந்துள்ளார். மேலும் மக்களை உருக வைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் ‘சாரல்’ என்ற சிறுமி நடித்துள்ளார். இப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாருடன் பணியாற்றியுள்ளேன். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் வராத மெட்டுக்களாக வேண்டும் என கேட்டேன். அதேபோல் எழுதிக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மிகத் தேர்ந்த நடிப்புக் கலைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம். எப்போதுமே ஒரு தரமான படைப்பு அந்த கதைக்கு தேவையான அனைத்தையும் அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதுபோல தான் இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படைப்பும் தனக்கு தேவையான நடிகர்கள், இசையமைப்பாளர், எழுத்தாளர் தயாரிப்பாளர், இடங்களைத் தேர்வு செய்து கொண்டது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் தங்கர்பச்சான்

இந்த படம் ஏதோ ஒன்று செய்ய போகிறது என என்னுடைய மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.ஒரு இயல்பான சினிமாவை பார்க்கப் போகிறீர்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் பெரிய நடிகர்கள் படத்தை வெளியிட காத்துக் கிடக்கின்றனர். இதற்கு மக்களும் ஒரு காரணம். அழகி, பள்ளிக்கூடம் போன்ற நல்ல படங்களை மக்கள் திரையரங்கில் பார்த்து வசூல் ரீதியாக எங்களுக்கு வெற்றி கொடுத்திருந்தால் இதுபோல் 50 படங்களை இயக்கியிருப்பேன். நல்ல படங்களை வீட்டில் பார்த்துக் கொள்ளலாம், மசாலா படங்களை திரையரங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை மக்களுக்கு மாற வேண்டும். பிரமாண்ட படங்களை விடுத்து, இதுபோன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. மக்களின் வாழ்வியலைப் படமாக எடுக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை மிக குறைவு.

நான் இதுவரை வட தமிழகம் பகுதியில் உள்ள இடங்களில்தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். தென் தமிழகத்தில் நடத்தியதில்லை. இக்கதை தேர்ந்தெடுத்த இடம் ராமேஸ்வரம். இங்கு நிறைய இடங்கள் இருக்கு, இயற்கை காட்சிகள் இருக்கு என்பதற்காக வரவில்லை. ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற கதைக்கான இடம். படத்தை பார்க்கும்போது அதனை உணர்வீர்கள்.

பல மனிதர்கள் ஒரு பாதையில் சந்திக்கக்கூடிய வாழ்வியல் சம்பந்தப்பட்டதுதான் இந்த கருமேகங்கள் கலைகின்றன படம் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பாரதிராஜா, “பிரமாண்டம் என்பது ‘கனவு’ “அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை போன்ற படங்களில் சினிமாத்தனம் இருக்காது. சினிமா என்பது வித்தை காட்டுவது போல், ஆனால் வித்தையாக மட்டுமே இருக்கக்கூடாது. நீ யார், நான் யார் என்பதை உணர்த்தக்கூடிய வாழ்வியலோடு கலந்த படங்களாக இருக்க வேண்டும். அதுபோன்ற படங்களைத் தான் தங்கர்பச்சான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நான், கௌதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி உதயகுமார், எஸ்.ஏ சந்திரசேகர் என தங்கர்பச்சான் உள்பட ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளோம். நான் ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்துள்ளேன், எனக்கு மகனாக கௌதம் வாசுதேவ்மேனனும், மகளாக அதிதியும் நடித்துள்ளனர். இது பிரமாண்டம் கிடையாது. மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கை தான் இந்த படம் எனத் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ” தங்கர் சார் என்னுடைய நண்பர். அவர் கேட்டு இல்லன்னு சொல்ல முடியாது. பள்ளிக்கூடம் படத்தில் நடிக்க கேட்டபோது ஏதோ ஒரு காரணம் சொல்லி விட்டுட்டேன். ஆனா இந்த தடவை கேட்டப்ப என்னால அப்படி சொல்ல முடியல. அது மட்டும் காரணம் இல்ல, அவருடைய தேடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கதையை என்கிட்ட சொல்லல நீங்க பண்றீங்க அவ்வளவுதான் அப்படின்னு சொல்லிட்டாரு. இந்த கதையை கேட்டதுக்கு அப்புறம், அதில் ராமநாதன் என்கிற கேரக்டர் யார் பண்றாங்கனு கேட்டேன், பாரதிராஜா சார்ன்னு சொன்னாரு, இப்ப வரைக்கும் இன்னொருவர் இடத்தில் நடிகராக அமர்ந்திருக்கிறேன் என்ற மனநிலையில் தான் உள்ளேன். நான் ஒரு இயக்குநர் மட்டும்தான் நடிகன் என்பதை நினைக்கவே இல்லை. பாரதிராஜா சார் நடிக்கிறாங்கன்னு சொன்னதுமே எனக்கு ஒரு கதவு திறந்த மாதிரி இருந்துச்சு.

நான் அவரிடம் உதவியாளராக சேர வேண்டும் என முயன்றிருக்கிறேன்.இப்படம் அவருடன் பேசிப் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு நாவலை படித்த உணர்வு இப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு ஏற்படும். என்னை இதுவரை வில்லன், போலீஸ் அதிகாரி போன்ற சீரியஸான கதாபாத்திரத்தில் பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில் என்னை வேறு ஒரு நடிகனாக தங்கர்பச்சான் காட்டியிருப்பதாகக் கூறினார்.

நடிகை அதிதிபாலன் பேசும்போது, ” இப்படத்தில் இத்தனை ஜாம்பவான்களுடன் நடிப்பதை எனது பாக்கியமாக நினைக்கிறேன். தங்கர்பச்சான் சார், எனக்கு கதையை அவ்வளவு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காக முழு கதையயும் என்னிடம் கூறினார். ‘அருவி’ படத்திற்கு பிறகு இப்படம் என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்” என கருதுவதாக கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours