செம்பி Review: முத்திரை பதித்த கோவை சரளா… மற்றவை எப்படி? | sembi movie review

Estimated read time 1 min read

கொடைக்கானலின் புலியூரைச் சேர்ந்த பழங்குடியின பெண் வீரத்தாயி (கோவை சரளா). தன் 10 வயது பேத்தி செம்பியுடன் (நிலா) வாழ்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் கிடைக்கும் மலைத்தேன், கிழங்குகளை விற்று தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் வீரத்தாயின் பேத்தி செம்பி கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்த 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். உடைந்து போகும் வீரத்தாயி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர போராடுகிறார். அந்தப் போராட்டத்தில் அவருக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? குற்றவாளிகள் யார் யார்? இதுதான் படத்தின் திரைக்கதை.

தன்னுடைய முகத்தோற்றத்தை மாற்றி, சுருக்கம் உள்ளிட்ட நுணுக்கங்களுடன் பழங்குடியின மக்களில் ஒருவராக திரையில் தோன்றுகிறார் கோவை சரளா. இதுவரை நடித்ததிலேயே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அனுபவம் வாய்ந்த தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த திரையையும் ஆக்கிரமித்து மிரட்டுகிறார். ஓரிடத்தில் அவர் உடைந்து அழும் காட்சியில் கலங்கச் செய்து முத்திரைப் பதிக்கிறார்.

செம்பியாக நடித்திருக்கும் சிறுமி நிலா, நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்கிறார். குறிப்பாக குற்றவாளிகளைக் கண்டு நடுங்கும் காட்சியும், க்ளைமாக்ஸின் நடிப்பும் திரைத் துறையில் அவருக்கான எதிர்கால இடத்தை உறுதி செய்கிறது. அஸ்வின் தனக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை பதிவு செய்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் துணைக் கதாபாத்திரங்களுகளில் வலு சேர்க்கின்றனர்.

அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளை இருப்பிடமாக கொண்டு இயற்கையுடன் இயைந்து வாழும் வீரத்தாயின் உலகிற்குள் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். ஒளிப்பதிவாளர் எம்.ஜீவன் அங்கிருக்கும் காடுகளையும், மலைகளையும் ஜீவனாக்கி காட்சிகளை அதே தட்ப வெட்ப நிலையில் திரையரங்குகளுக்குள் கடத்தி குளிரை கண்களுக்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் கடத்துகிறார். பிரபு சாலமன் தன் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து காட்டும் உலகம் அலாதியானது. வீரத்தாயைத் தாங்கும் செம்பி… செம்பியைத் தாங்கும் வீரத்தாய். உறவுகளுக்கிடையே உறுத்தலில்லாமல் கட்டமைக்கும் உலகம் கதைக்குள் நுழையும் போது வேகமெடுக்கிறது. அந்த உலகில் நாமும் ஒருவராக இருப்பதால் ‘செம்பி’யின் பாதிப்பு நம்மையும் ஆட்கொண்டு ‘நீதி’யை கோர வைக்கிறது.

பாலியல் வன்கொடுமையை தேர்தலுக்காக பயன்படுத்தும் கட்சிகள், அதிகாரத்துக்கும் பணத்துக்கும் படியும் காவல் துறை, பொது சமூகத்தின் கண்ணோட்டம் என பல்வேறு விஷயங்களை பேசுகிறது படம். ஆனால், படத்தில் ஓடும் பேருந்து ஓரிடத்திற்கு பிறகு தடம் மாறுவது போல, படமும் அதன் பாதையிலிருந்து விலகி விடுகிறது. தொடக்கத்தில் கோவை சரளா பார்வையிலிருந்து பயணிக்கும் படம், ஒரு கட்டத்தில் மீட்பராக வரும் அஸ்வினிடம் தஞ்சம் புகுந்து ஹீரோயிசத்திற்கு அடிபணிவது நெருடல்.

‘மைனா’ படத்தை நினைவூட்டும் பேருந்து காட்சிகளும், அதில் நீளும் பாடமெடுக்கும் வசனங்களும், அதீத உரையாடல்களும் அயற்சி. அஸ்வினை நல்லவராக காட்ட வைக்கப்பட்ட சீன்களும், சண்டைக்காட்சிகளும், நாயக பிம்பத்தை கட்டமைப்பதும் பலவீனம். யதார்த்ததிலிருந்து விலகும் பேருந்து சாகச காட்சிகளும், மேலோட்டமாக நகரும் நீதிமன்ற காட்சியும் தேவையான அழுத்தத்தைக் கூட்டவில்லை.

எங்கேஜிங்காக படத்தை நகர்த்த முயற்சித்திருக்கும் இயக்குநர், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். கலங்க வைக்கும் சில காட்சிகளுக்கு நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை பக்கம் பலம். ‘‘உண்மையை புரிய வைக்க மொழி தேவையில்லை வலி போதும்” வசனமும், ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என இறுதியில் வரும் வசனம் கவனம் ஈர்க்கிறது. ‘டைல்ஸ் மண்டை’, ‘மைதா மாவு மூஞ்சி’ போன்ற உருவகேலிகள் முகச்சுளிப்பு. படத்தின் யதார்த்ததைக்கூட்டிய ஒப்பனையாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரின் பணி குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை கையிலெடுத்து, அழுத்தமான வலியை கடத்த நினைத்திருக்கும் பிரபு சாலமனின் செம்பி சில தடுமாற்றங்களால் திணறியிருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours