சங்ககிரி:
சங்ககிரி அருகே லாரி மோதியதில் மருந்து கடைக்குள் பள்ளி பஸ் பாய்ந்தது. இந்த விபத்தில் விவசாயி பலியானார். பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
சங்ககிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சில் 33 மாணவ-மாணவிகள் இருந்தனர். பஸ்சை சங்ககிரி கஸ்தூரி பட்டியை சேர்ந்த டிரைவர் நல்லாக்கவுண்டர் (வயது 52) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மாணவ-மாணவிகளை இறக்குவதற்காக பஸ் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த லாரி முன்னால் சென்ற ஒரு சரக்கு ஆட்டோ மீது மோதி விட்டு, நின்றிருந்த தனியார் பள்ளி பஸ் மீது பயங்கரமாக மோதியது.காயம்
மோதிய வேகத்தில் அந்த பஸ், சாலையோரம் இருந்த மருந்து கடைக்குள் பாய்ந்தது. மேலும் சாலையோரம் நின்றிருந்த சிலர் மீதும் பஸ் மோதியதாக தெரிகிறது.
இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் வந்த மாணவ-மாணவிகளான சன்னியாசிபட்டி காலனியை சேர்ந்த சரவணமூர்த்தி என்பவரின் மகன் ஹரிவர்ஷன் (வயது 4), மாதேஸ்வரன் மகள் கவீன்யா (7), சங்ககிரி பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஜனனி (10), பஸ் டிரைவர் நல்லாக்கவுண்டர், பஸ்சில் வந்த வசந்தம் காலனியை சேர்ந்த பெண் உதவியாளரான வெங்கடாசலம் என்பவரின் மனைவி வெங்ககாந்திமதி (45), மேலும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த கொழிஞ்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கர் (52), சன்னியாசிபட்டியை சேர்ந்த கந்தசாமி (44) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்களில் மேல் சிகிச்சைக்காக பாஸ்கர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours