யூடியூப் பார்வைகளில் முந்தும் ‘வாரிசு’, ‘துணிவு’ பாடல்கள் | ajith’s thunivu and vijay’s varisu movie songs views list

Estimated read time 1 min read

எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் பாடல்களும் தேதி குறிப்பிட்டு பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் யூடியூப்பில் அதிக வியூஸ்களை அள்ளிய பாடல்கள் குறித்து பார்ப்போம்.

ரஞ்சிதமே: தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இப்பாடலை நடிகர் விஜய் – மான்ஸி இணைந்து பாடியுள்ளனர். இந்தப்பாடல் இதுவரை 10 கோடியே 90 லட்சம் பார்வைகளைப் பெற்று ஹிட்டடித்திருக்கிறது.

தீ தளபதி: அடுத்ததாக கடந்த டிசம்பர் 4-ம் தேதி ‘வாரிசு’ படத்தின் ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. விவேக் வரிகளில் நடிகர் சிலம்பரசன் இந்தப்பாடலை பாடியிருந்தார். கூடவே ஆடியுமிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இப்படத்தின் பாடல் யூடியூப்பில் தற்போது வரை 2 கோடியே 90 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது.

சோல் ஆஃப் வாரிசு: அண்மையில் டிசம்பர் 20-ம் தேதி கே.எஸ்.சித்ரா குரலில் ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் வெளியான இப்படத்தின் பாடல் இதுவரை யூடியூப்பில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

சில்லா சில்லா: அஜித்தின் ‘துணிவு’ படத்தின் பாடல்களை எடுத்துக்கொண்டால் கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதன் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியானது. அனிருத் ரவிச்சந்திரன், வைசாக், ஜிப்ரான் பாடியிருந்த இப்பாடலின் வரிகளை வைசாக் எழுதியிருந்தார். இப்பாடல் யூடியூப்பில் இதுவரை 2 கோடியே 40 லட்சம் பார்வைகளை எட்டியிருக்கிறது.

காசே தான் கடவுளடா:அடுத்து டிசம்பர் 18-ம் தேதி வெளியான ‘காசே தான் கடவுளடா’ பாடலை வைசாக் எழுதி பாடியிருந்தார். உடன் ஜிப்ரான் பாடியிருந்த இப்பாடலை மஞ்சுவாரியரும் பாடியதாக கூறப்படுகிறது. இதுவரை இப்பாடல் 80 லட்சத்து 80 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

கேங்க்ஸ்டா: நேற்று (டிசம்பர் 25) வெளியான ‘கேங்க்ஸ்டா’ பாடல் இதுவரை 30 லட்சத்து 70 ஆயிரம் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இப்பாடல் வரிகளை ஷபீர் சுல்தான், விவேகா இணைந்து எழத ஷபீர் சுல்தான், ஜிப்ரான் பாடியுள்ளனர்.

விஜய்யின் ‘வாரிசு’ பட பாடல்கள் அனைத்தும் வெளியான நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தின் எஞ்சிய பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours