சிட்டியைக் கைக்குள் போட்டுக்கொண்டு போலீஸையே நடுங்க வைக்கும் மிகப்பெரிய தாதாவின் கொட்டத்தையும், அப்படியே இலவச இணைப்பாய் நூற்றுக்கணக்கான ரவுடிகளையும் ஒழித்துக்கட்டும் ஒரு கான்ஸ்டபிளின் புத்திசாலித்தனமான ஆயுதமே இந்த லத்தி! அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமாரின் ‘லத்தி’ கதை என்ன?
நீலாங்கரை காவல் நிலையத்தில் ‘லத்தி ஸ்பெஷலிஸ்ட்’டான கான்ஸ்டபிள் விஷால், தன் லத்தியாலேயே ஒரு வருடம் சஸ்பெண்டு செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறார். வேலைக்குச் சேரத் துடியாய் துடிக்கும் விஷால், சீனியர் அதிகாரியான தலைவாசல் விஜய்யின் உதவியை நாட, அவர், அவருக்கு சீனியரான பிரபு மூலம் 6 மாதத்தில் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு மீண்டும் விஷால் வேலையில் சேர உதவுகிறார்.
தன் சஸ்பென்ஸனுக்குக் காரணமான லத்தி ட்ரீட்மெண்ட்டையே இனி யாருக்கும் செய்ய மாட்டேன் என மனதுக்குள் சத்தியம் செய்துகொண்டு சாதுவான போலீஸாகப் பணியைத் தொடரும் விஷாலுக்கு, திரைக்கதை விதிப்படி பிரச்னை பிரபு ரூபத்தில் வருகிறது, மீண்டும் வேறு வழியின்றி லத்தியைக் கையில் எடுக்கிறார். ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் பாதையில் அரசியல்வாதிகளையே மிரட்டும் தாதா சுறாவின் மகன் வெள்ளை குறுக்கே வர, நிலவரம் கலவரமாக, தன்னையும் தன் மகனையும் வில்லன் மற்றும் ஆயிரக்கணக்கான ரவுடிகளிடமிருந்து விஷால் காப்பாற்றிக்கொண்டாரா என்பதே படத்தின் கதை.
+ There are no comments
Add yours