சேலம்:
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் பிச்சுமணி (30). இவர் தனது மனைவி திவ்யா (29), அவர்களது பெண் குழந்தை, மற்றும் அவரது உறவினர் ராஜலட்சுமி(34) ஆகியோருடன் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் ஏற்காட்டில் தனியார் விடுதியில் வாடகைக்கு எடுத்து 2 நாட்கள் தங்கினர். தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.பின்னர் நேற்று மாலை ஆறு மணி அளவில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனத்தை பிச்சுமணியால் ஒட்ட முடியவில்லை. இதனால் ஒண்டிகடை பகுதியில் இருந்த டீ கடையில் டீ குடித்து விட்டு அந்த வழியாக வந்த நபரிடம் கார் ஓட்ட டிரைவர் யாராவது கிடைப்பார்களா என்று கேட்டார்.
அதற்கு அவர் நான் டிரைவர் தான் என்று கூறி சேலம் வரை கார் ஓட்டி வர ரூ. 400 கூலியாக கேட்டுள்ளார். பிச்சுமணி அதற்கு சம்மதித்தார். இதை தொடர்ந்து வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.
இவர்களது வாகனம் மலைப்பாதை 17-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை மீறி நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்பு காயம் அடைந்தவர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.
+ There are no comments
Add yours