48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்- கோவையில் தற்கொலை செய்த மாணவி விவரங்களை வெளியிட்டதாக வழக்கு!

Estimated read time 1 min read

கோவை:

கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது அடையாளங்களை பகிரங்கமாக வெளியிட்டதால் 48 யூடியூப் சேனல்கள் மீது கோவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போக்சோவில் இருவர் கைது

பாலியல் தொல்லை கொடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெங்களூருவில் பதுங்கி இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன.

யார் அந்த 2 பேர்?

மேலும் இந்த சம்பவத்தில் 2 பேருக்கு தொடர்புள்ளதாக மாணவியின் தற்கொலை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பேர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 பேர் குறித்து எந்த துப்புமே கிடைக்காமல் கோவை போலீசார் திகைத்து போயுள்ளனர்.

நீதிமன்றம் கண்டிப்பு

இதனிடையே ஊடகங்கள், யூடியூப் சேனல்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்த விவரங்கள் பகிரப்படுத்தப்பட்டது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கடும் கண்டிப்புடன் நடந்து கொண்டது. பாலியல் சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடக் கூடாது என்பதை மீறி மாணவியின் பெயர், படங்களை வெளியிட்டவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கட்டுமா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

இதனைத் தொடர்ந்து கோவை போலீசார் இப்போது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் விவரங்களை அடையாளப்படுத்திய அதாவது புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன. இதில் 2 செய்தித்தாள்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது 23(2) பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours