சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஜல்லி கிரஷர் காவலாளியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் விசாரணை நடத்தினார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமாக காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி ஊராட்சியில் ஜல்லி கிரஷர் உள்ளது. இந்த கிரசரில் நடுப்பட்டி ஊராட்சி காக்காயன் காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் சேகர் வயது 45 என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.மேலும் அதே பகுதியில் ஆடு மாடு உள்ளிட்டவைகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கமாக இவர் இரவு நேரங்களில் ஜல்லிகிரசருக்கு காவலுக்கு இருந்து வந்துள்ளார்.
வழக்கம் போல நேற்று இரவு காவல் பணியில் இருந்துள்ளார். ஆனால் நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரை தலை மற்றும் உடல் பகுதியில் வெட்டி கொலை செய்து உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த சிலர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்துவிட்டு கிரசர் உரிமையாளர் நாராயணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அவர் இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, செல்வம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கிரசரில் உள்ள பொருட்களை யாரேனும் திருட வந்து கொலை செய்தார்களா? அல்லது சொத்துக்காக கொலை செய்தார்களா? அல்லது பெண்கள் தொடர்பின் காரணமாக கொலை செய்தார்களா ? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன காவலாளி சேகருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துள்ள நிலையில் மகன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே ஜல்லி கிரஷர் காவலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours