சென்னை:
தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நிலம் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஊழல் இல்லாத நிலையை கொண்டுவருவோம் என அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் இணையத்தில் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதேப்போன்று கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோயில்களை சீரமைப்பது, புனரமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதோடு கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவோம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட 540.39 ஏக்கர் நிலம், 496 கிரவுண்ட் மனைகள், 20 கிரவுண்ட் கட்டடம் மீட்கப்பட்டுள்ளன. 46 கிரவுண்ட் திருக்குளக்கரை நிலமும் மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
991 அக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்களின் மதிப்பு ரூ.2,9043 கோடி என்று அரசு அறிவித்துள்ளது. இதேபோல், கும்பகோணம் வெங்கடாசலபதி கோயிலுக்கு சொந்தமான 10.37 ஏக்கர் நிலமும், திருவானைக்காவல் அருகே அரங்கநாதர் கோயிலுடன் இணைந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 55 சென்ட் நிலமும் மீட்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பூதிப்புறம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு வருகிறது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவிட்டு நிலஅளவைக் கல் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
+ There are no comments
Add yours