வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறாரா விஜய்?.. உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கிய இயக்கத்தினர்..!

Estimated read time 1 min read

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் போட்டியிட தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்

இதில் பல முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிடுகிறது. கடந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் 160 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 இடங்களில் வெற்றி பெற்றனர்.

விஜய்யின் புகைப்படம்

கடந்த முறை அக்கட்சியினர் நடிகர் விஜய்யின் பெயரையோ புகைப்படத்தையோ கொடியையோ பயன்படுத்தவில்லை. அப்படியிருந்தும் அத்தனை இடங்களில் வெற்றி பெற்றது மற்ற கட்சிகளை ஆச்சரியப்பட வைத்தது. கடந்த தேர்தலை போல் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகிறார்கள்.

இயக்கக் கொடி

அவர்கள் விஜய்யின் புகைப்படம், இயக்கக் கொடி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள விஜய் அனுமதி அளித்துள்ளதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இயக்கத்தினர் உற்சாகம்

இயக்கக் கொடி, புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள விஜய் அனுமதி கொடுத்துவிட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதையடுத்து தங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்படாததால் ஆட்டோ சின்னம் மறுக்கப்பட்டது.

விஜய் அறிவிக்கிறார்

எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போட்டியாக விஜய் மக்கள் மன்றத்தினரும் பல்வேறு இடங்களில் சுயேச்சையாக களமிறங்குகிறார்கள். வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவிப்பார் என தெரிகிறது.

விஜய் புகைப்படம்

வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகாவிட்டாலும் விஜய் மக்கள் மன்றத்தினர் இப்போதே பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டனர். சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தற்போது விஜய் புகைப்படம், இயக்கக் கொடிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதல் இடங்களில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறப்பட்டது.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours