இந்தியா:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,34,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,92,522 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 893 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், பாதிப்பு அபாயம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி பூனம் கேத்ரபால் சிங். இதற்கிடையே, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா சனிக்கிழமையன்று நடந்த 5 மாநிலங்களுடனான கொரோனா மறு ஆய்வுக்கூட்டத்தின்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 75% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், ’’தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக்கிய அனைவரை குறித்தும் பெருமைகொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 5 மாநிலங்களில் மட்டும் 63.31% தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் மட்டும் 21.69% புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தைப்போல் ராஜஸ்தானிலும் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 6 வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours