புதுடெல்லி:
3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றது. பாரத் ஸ்டேட் வங்கி நிர்வாகம் சார்பில், புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை வெளியிடப்பட்டது. இதன்படி, பெண் பணியாளர் ஒருவர் 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால், அவர் பணியில் சேர தகுதியில்லை. இவர்கள் குழந்தை பெற்ற பின்னர், 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் ஆவர்.
பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவ்விதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது. தற்போது மீண்டும் அவ்விதி கொண்டு வரப்பட்ட நிலையில், அது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
எஸ்பிஐ-ன் புதிய விதிமுறைகள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், பாலின பாகுபாட்டை காட்டுவதாகவும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் – இந்தியாவுக்கு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றது.
+ There are no comments
Add yours