தமிழ் என்றால் தமிழ்நாடு என்றால் ஏனோ அவர்களுக்கு கசக்கிறது.. உடைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

Estimated read time 1 min read

சென்னை :

எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல, அவர்களுக்கு தமிழ் என்றால் தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது என மொழிப் போர்த் தியாகிகள் நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப் போர்த் தியாகிகள் நாள் கூட்டத்தில், காணொலி வாயிலாகப் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கொள்கை முழக்கத்தோடு தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீந்தமிழுக்காக ஒப்படைத்த தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என்றார்.

தியாகிகளுக்கு வீர வணக்கம்

உங்கள் உயிரால் தமிழ் உயிர் பெற்றது உங்கள் உணர்வால் நாங்கள் உணர்ச்சி பெற்றோம்! உங்கள் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்தது நீங்கள் மூட்டிய தீ, இன்னும் எரிந்துகொண்டு இருக்கிறது என பேசிய முதல்வர் ஸ்டாலின், மொழிப்போர்த் தியாகிகளே! உங்கள் தியாகம்தான் எங்களை இன்றுவரை விழிப்போடு வைத்திருக்கிறது எனவும், உங்களுக்கு மீண்டும் நான் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் எனக் கூறினார்.

ஓடிவந்த இந்திப் பெண்

“ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே!” – என்று தனது கால்சட்டைப் பருவத்தில் புலி – வில் – கயல் கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் புறப்பட்டவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதுபோன்ற எத்தனையோ தமிழ் இளைஞர்களை, தமிழைக் காப்பாற்றுவதற்காகத் தட்டி எழுப்பினார் தந்தை பெரியார் அவர்கள் எனவும், இராஜாஜி அவர்களே இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ஆம் ஆண்டு பேசியாக வேண்டியது இருந்தது எனவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜாஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என்றால் இன்றைய பா.ஜ.க.வினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை எனக் பேசினார்.

தமிழ் என்றால் கசக்கிறது

தமிழ், தமிழ் என்று பேசுவதால் அது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி மட்டுமல்ல, எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல அவர்களுக்கு, தமிழ் என்றால், தமிழ்நாடு என்றால் ஏனோ கசக்கிறது. சனவரி 26-ஆம் நாள் – அதாவது நாளை குடியரசு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டுக்கு மிக முக்கியமான இரண்டு நாட்கள் – ஒன்று – ஆகஸ்ட் 15 – சுதந்திர நாள்! மற்றொன்று – சனவரி 26 – குடியரசு நாள் எனவும், தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் – தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் – அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் எனவும், எந்த நோக்கத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதோ – அந்த நோக்கத்திலிருந்து இம்மியளவும் மாறாமல் கழகம் செயல்படும் என குறிப்பிட்டார்.

மாணவரணி தூதுவர்கள்

திமுகவின் உழைப்பை, சாதனைகளைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக கழகத்தின் மாணவரணி செயல்பட வேண்டும் எனவும், எதிர்காலத் தலைமுறையான மாணவச் சமுதாயத்துக்கு ஏற்றமிகு வாழ்வை அமைத்துத் தரும் பெரும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது, அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளும் கடமை மாணவச் சமுதாயத்துக்கு இருக்கிறது எனவும், தாய்மொழியாம் தமிழை பிறந்த தாய்நாட்டை காக்க உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மாணவச் சமுதாயத்தின் அனைத்துத் தம்பிமார்களையும் தங்கையரையும் உங்கள் அண்ணனாக அன்போடு கேட்டு விடைபெறுகிறேன், மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours