லாக்-அப் மரணங்களை தடுக்க காவல்துறை புகார் ஆணையம்.. நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி..!

Estimated read time 1 min read

சென்னை:

தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

லாக்-அப் மரணங்கள் தொடர்பான புகார்கள்

காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் உயர்நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆனையமும் அமைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மாநில அளவிலான புகார் ஆனையத்திற்கு உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யம் வழக்கு

மாவட்ட அளவிலான புகார் ஆனையத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட ‘காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்ட’ விதிகளை சட்டவிரோதமானது என அறிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைகக்கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

உயர் நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமூக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசுக்கு உத்தரவு

அப்போது நீதிபதிகள் உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதற்கான விதிகளை வகுத்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? என தமிழக அரசு ஜனவரி 31ஆம் தேதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும், நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours