சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை குறைக்க இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் வேறு ஒரு நாளும் முழு லாக்டவுன் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருபக்கம் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இரவு நேர ஊரடங்கு
கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான். தமிழக அரசு ஊரடங்கை மீண்டும் கையில் எடுத்தது. கடந்த 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு ஊரடங்கில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடங்க மறுக்கும் கொரோனா
இரவு ஊரடங்கின்போது மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் பொது போக்குவரத்து இயங்குவதில்லை. இப்படி ஊரடங்கு போடப்பட்ட போதிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றையை பாதிப்பு முன்பை விட சற்று குறைந்தாலும் கொரோனா 24,000-ஐ நெருங்கி இருக்கிறது.
இதனால் பலனில்லை
முழு ஊரடங்கு அமலுக்கு வந்து 10 நாட்களை கடந்த பிறகும், 2 வார ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்பட்ட போதிலும் கொரோனா தொற்று தினமும் அதிகரித்துதான் வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் வீடு திரும்ப உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இரவு நேர முழு ஊரடங்கால் எதிர்பார்த்த அளவு கொரோனா தொற்று குறையவில்லை என்று தமிழக அரசு கருதுவதாக கூறப்படுகிறது.
இந்த நாளிலும் முழு ஊரடங்கு?
இதனால் ஞாயிற்றுக்கிழமை போன்று சனிக்கிழமையும் எந்தவித முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேர ஊரடங்கில் பேருந்துகள் இயக்கப்படுவதால் சிறிதளவு மக்கள் நடமாட்டம் இருக்கிறது என்று அதிகாரிகள் மூலம் அரசுக்கு தகவல் பறந்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தை நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் நல்ல செய்தி
அதே வேளையில் தினமும் முழு லாக்டவுன் கொண்டு வருவதற்கு தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிகிறது. நேற்று முன்தினத்தை விட நேற்று தொற்று குறைந்ததால் சனிக்கிழமையும் லாக்டவுன் கொண்டு வந்தால் மேலும் கட்டுப்பாடுகளை குறைக்க முடியும் என்றும் அரசு கருதுவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அரசின் அறிவிப்பு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours