தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்த 2 நபர்களை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு வழக்கு தொடர்பாக பிடித்துச் சென்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று மீண்டும் அரண்மனைப்புதூருக்கு வந்தனர். அங்கே மேலும் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரண்மனைப் புதூரில் இருந்து பொதுமக்கள் பலர் பாத்திரங்கள், பாய்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று ஊர்வலமாக வந்தனர். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்தே கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஊர்வலத்தில் சில பெண்கள் கைக்குழந்தையை தூக்கி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை அவர்கள் சாலையில் வீசி எறிந்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
+ There are no comments
Add yours