தாம்பரம்:
ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் மட்டும் இடிக்கப்படுவதாக அவதூறு வீடியோ பரவும் நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாம்பரம் அருகே வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதார துறையினர் கோயிலை இடிக்க முடிவு செய்து கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். கடந்த 19ஆம் தேதி கோயிலை இடிக்க அதிகாரிகள் வந்த நிலையில் அங்கிருந்த பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சிலர் கோபுரத்தின் உச்சியில் ஏறி கோயிலை இடிக்கக்கூடாது என்று போராடினர். அப்போது போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் அதிகாரிகள் கோயிலை இடிக்காமல் திரும்பியதாக தெரிகிறது.
இதை அடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமன் கோவில் இடிக்கப்பட்டது. திமுக அரசு ஆக்கிரமிப்பில் உள்ள தேவாலயத்தை இடிக்காமல் கோயிலை மட்டும் இடிப்பதாக கூறி சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு வீடியோ பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் வரதராஜ புறத்தில் அடையாறு நீர்வழி பாதையில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கோயில் மட்டுமின்றி தேவாலயம் உள்ளிட்டவையும் அகற்றப்பட்டது. அவதூறு பரப்பியதாக இதுவரை 15 பேர் மீது மணிமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.
+ There are no comments
Add yours