இரவு நேர ஊரடங்கு
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரங்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
போக்குவரத்து
மாநிலத்திற்குள் தனியார் மற்றும் பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும். மாநிலத்துக்கு இடையேயான போக்குவரத்தில் முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலை பரிசோதனை, கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள்
பால் விநியோகம், பத்திரிக்கை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவை, ஏ.டி.எம் மற்றும் சரக்கு, எரிபொருள் வாகனங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
தொழிற்சாலைகள்
உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படலாம். பணிக்கு செல்லும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்குமாறும் அறிவுறுத்தல்.
முழு ஊரடங்கு
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்காது. முழு ஊரடங்கின்போது உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் மேற்கூறிய நேரத்தில் மட்டுமே அனுமதி. 9 ஆம் தேதி மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி பேருந்து, ரயில், விமான நிலையங்களுக்கு சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணிக்கலாம்.
பள்ளி, கல்லூரி
மழலையர் காப்பகங்கள் செயல்படலாம், ஆனால் மழலையர் பள்ளிகள் செயல்படத் தடை. 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை.
அனைத்து விதமான பயிற்சி நிலையங்கள், பொருட்காட்சி, புத்தகக்காட்சிகள் நடத்த தடை. மெட்ரோ ரயிலில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
பொங்கல் விழா
அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைகளில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
வழிபாட்டு தலங்கள்
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவைதவிர, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கும். அதாவது, திரையரங்கு, சலூன் உள்ளிட்ட இடங்களில் 50 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதித்தல், திருமணத்துக்கு 100 பேர், இறப்பு நிகழ்வுக்கு 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும்.
+ There are no comments
Add yours