“நான் பத்தாவது படிக்கும்போதே கோரியோகிராபர் ஆகணும்னு முடிவெடுத்துட்டேன். டான்ஸ் சார்ந்து எல்லாமே கத்துக்கணும்னு ஆசை. லண்டன்ல லத்தீன் அமெரிக்கன் டான்ஸ் ஃபார்ம்ஸ் கத்துக்கிட்டு சென்னைக்கு வந்தேன். அப்போ இங்கே `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சி போய்க்கிட்டிருந்துச்சு. நாமளும் டி.வி-க்குப் போகணும்னு முடிவு பண்ணினேன். தினமும் விஜய் டி.வி ஆபீஸ்க்குப் போய் வாய்ப்பு கேட்டுட்டே இருந்தேன். அப்படித்தான் `Boys Vs Girls’ வாய்ப்பு கிடைச்சது…”
‘சல்சா’ மணியிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான `ராஜா ராணி’ தொடரின் மூலம் நடிகரானவர், புதிதாக வந்திருக்கும் `வீட்டுக்கு வீடு வாசப்படி’ தொடரில் அசத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம், “அதென்ன ‘சல்சா’ மணி?” என்ற கேள்வியோடு உரையாடலைத் தொடங்கினோம்.
“நம்ம ஊர்ல அந்தச் சமயத்துல லத்தீன் அமெரிக்கன் டான்ஸ் ஃபார்ம் பற்றி விழிப்புணர்வு இல்ல. ‘மணி யாரு’ன்னா, ‘சல்சா ஆடுவாரே அவரா’ன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சாங்க. தீபக், டிடி ரெண்டு பேரும் தொகுத்து வழங்கும்போது `சல்சா’ மணி’ன்னு சொல்லிக் கூப்பிடுவாங்க. அது அப்படியே அடையாளமாகி என் பெயரோட ஒட்டிடுச்சு. அதுல எனக்கு சந்தோஷம்தான்… ஆனாலும், ‘இவர் `சல்சா’ மட்டும்தான் ஆடுவார் போல’ன்னும் தப்பா நினைச்சிடுறாங்க. அதை மாத்துறத்துக்காகவே தொடர்ந்து ஓடிட்டிருக்கேன்!” என்கிறார் மணி.
“கோவில் திருவிழாவில் ஆடிதான் என் கரியரையே ஆரம்பிச்சேன். அப்போ 100 ரூபாய் கிடைச்சாலே பெரிய விஷயம். டான்சரா இருந்தெல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது. நம்ம தேவை போக ஃபேமிலிக்கும் சப்போர்ட் பண்ணணும்… நிறைய போராட்டங்களை எதிர்கொண்டிருக்கேன். லண்டன்ல டான்ஸ் கத்துக்கிட்டிருந்தப்ப முடி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. நம்ம டான்ஸ் கனவுக்கு இது ஒரு தடையா இருக்கக்கூடாதுன்னு துணிஞ்சு மொட்டை அடிச்சேன். இந்த லுக்குக்கு நான் வரும்போது எனக்கு வயது 25!
ஆக்சுவலி லண்டனுக்கு வேலைக்காகத்தான் போனேன். ஆனா, எனக்கு கார்ப்பரேட்ல ஒர்க் பண்ணுறதுல ஆர்வம் இல்ல. டான்ஸ் தான் பிடிச்சிருந்தது. டான்ஸ் கத்துக்கிறதுக்கு நிறைய செலவாகும். பார்த்த வேலையை விட்டுட்டு கிளீனிங் வேலை, செஃப்னு கிடைக்கிற வேலையையெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன். அதுல வர்ற காசைச் சேத்துவச்சு டான்ஸ் கத்துக்கிட்டேன். பஸ்ல போனா செலவாகும்னு பல கிலோமீட்டர் நடந்து போயிருக்கேன்..!’’ என்றவரிடம் சீரியல் என்ட்ரி குறித்துக் கேட்டோம்.
“எனக்கு நடிக்கவும் பிடிக்கும். குழந்தை நட்சத்திரமா சில சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். `ராஜா ராணி’ சீரியலில் பிரவீன் சார் மூலமா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அது ரொம்ப முக்கியமான கேரக்டர். ஆனா, கேமியோவா மாறிடுச்சு. மாஸ்டர்ஸ் படிக்க லண்டன்ல எனக்கு சீட் கிடைச்சிருந்தது. பிரவீன் சார்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பிட்டேன். கதைப்படி நான் அமெரிக்கா போனதாக காட்டினாங்க. அங்க இருந்தே நாலஞ்சு எபிசோட்ஸ் ஷூட் பண்ணி அனுப்பினேன். அமெரிக்கா போன அண்ணன் திரும்பி வர்ற மாதிரி கதை நகருங்கிறதனால எனக்கு பதிலா வேறு ஒருத்தரை ரீப்ளேஸ்மென்ட் பண்ண வேண்டியிருந்தது. அதான் தொடர்ந்து நடிக்க முடியல. இப்ப பிரவீன் சாரே நான் கேட்கிறதுக்கு முன்னாடி `வீட்டுக்கு வீடு வாசப்படி’ தொடரில் நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார். ஒட்டுமொத்த டீமும் குடும்பம் மாதிரி ஆகிட்டோம்!’’ என்கிறார் மணி.
“பெரிய திரை எப்போ?”
“அசிஸ்டென்டா நிறைய படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். ‘மெர்சல்’ படத்துல ஃபுட்பால் கிரவுண்ட் ஏரியா, ‘தெறி’ படத்துல திருவிழா சீக்வன்ஸ் எல்லாம் நான் பண்ணினேன். அட்லி சார் ரெண்டாவதா ஒரு மாஸ்டர் வேணும்னா யோசிக்காம என்னைத்தான் கூப்பிடுவார். ‘ஜவான்’ல ஒர்க் பண்ண வேண்டியது. அந்த டைம் எனக்கு எக்ஸாம் இருந்ததால பண்ண முடியல. சினிமாவுல பெரிய கோரியோகிராபர் ஆகணுங்கிறதுதான் என்கனவு. அதை நோக்கித்தான் ஓடிக்கிட்டிருக்கேன்.
`வேட்டை மன்னன்’ படத்துல நெல்சன் சாருடைய ஃபர்ஸ்ட் பிரேம்லயே நான்தான் இருந்தேன். அந்தப் படம் வந்திருந்தா நல்ல ரீச் கிடைச்சிருக்கும். அது மிஸ் ஆகிடுச்சு. நிறைய பேர் கூப்பிட்டுப் பேசிட்டு, Bald Look-ல இருக்கிறதால சரியா வராதுன்னு ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. இது போல நிறைய ரிஜெக்ஷன்ஸ் நடந்திருக்கு. அதெல்லாம் நல்லதுக்குத்தான்னு நினைப்பேன். இப்போ கூடுதலா யோகா டீச்சர் வேலையும் போய்க்கிட்டிருக்கு. டான்ஸ் செமினாரும் எடுத்துட்டிருக்கேன். சீக்கிரமே நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்…’’
பாசிட்டிவ் எனர்ஜியுடன் தம்ப்ஸ் அப் காட்டுகிறார் மணி!
+ There are no comments
Add yours