“கணவர் காபி போட்டா மட்டும்தான் குடிப்பேன். அதனால, எங்கே இருந்தாலும் காபி போடுறதுக்கு சரியான நேரத்துக்கு அவர் வீட்டுக்கு வரணும்” என நீயா நானா விவாதத்தில் ஒரு பெண் பேசியதுதான், அக்னி வெயிலுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு, அது சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
‘ஒரு கணவரை இப்படியெல்லாமா கொடுமைப்படுத்துவாங்க?’ எனவும் ‘ஏன், காலங்காலமா மனைவிதான் கணவனுக்கு காபி போட்டு கொடுக்கணுமா? கணவன் காபி போட்டு கொடுத்தா என்ன குறைஞ்சா போய்டும்?’எனவும் காபியில் ஆரம்பித்து நீயா? நானா? குடும்ப விவாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வைரலான தமிழரசியைத் தொடர்புகொண்டு பேசினேன்.
“நானும் அவரும் காதல் திருமணம். என்னோட சொந்த ஊரு நெய்வேலி. அவரு ஓசூர். ரெண்டு பேரும் சென்னையில வேல்டெக் பொறியியல் கல்லூரியில படிச்சோம். அவர், என்னோட காலேஜ் சீனியர். படிக்கும்போதே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டோம். படிச்சு முடிச்சதும் சென்னையிலதான் ஒர்க் பண்ணினோம். திருமண பேச்சு வந்தப்போ, ரெண்டு பேர் வீட்டிலேயுமே ஒத்துக்கல. சாதி பிரச்சனை, மொழி பிரச்சனை எல்லாமே எங்க காதலுக்கு குறுக்க வந்து நின்னுச்சு.
ஆனா, நாங்க உறுதியா இருந்தோம். வீட்டுல கன்வின்ஸ் பன்றதுக்காகவே நாங்க ரெண்டு பேருமே வேலையையே விட்டுட்டோம். நல்லா வாழ்ந்து காட்டுறோம்னு ரெண்டுபேர் அப்பா அம்மாக்கிட்டேயும் பேசி, பேசி ஒரு வழியா கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிட்டோம்.
கல்யாணத்துக்கப்புறம், ஓசூர்ல ஆரா பொட்டிக் ஷாப் ஓபன் பண்ணினோம். ரெண்டு பேர் குடும்பத்துக்குமே பிசினஸ்னா என்னன்னே தெரியாது. நாங்க ரெண்டு பேரும் எஞ்ஜினீயரிங் ஃபீல்டு. அதனால, பிசினஸ் எப்படி பன்றதுன்னே தெரியல. ஆனாலும் ஜெயிச்சு காட்டணும்ங்குற நம்பிக்கை மட்டுமே இருந்துச்சு.
அதனால, பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினேன். ஆனா, நாங்க பிசினஸுக்கு புதுசுங்குறதால நிறைய பேரு ஏமாற்றிட்டாங்க. நஷ்டத்தோடு வலியும் வேதனையும்தான் மிஞ்சினது. அதுமட்டுமில்லாம, நெய்வேலியில இருந்தப்போ ரெண்டு வருசத்துக்கு முன்னால என்னோட ரெண்டு வயசு பையனை நாலு நாய்ங்க கடிச்சு குதறிடுச்சு. 80 இடத்துல தையல் போட வேண்டியதாகிப்போச்சு.
தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் பரபரப்பா பேசப்பட்டுச்சு. இப்போ, பையனுக்கு 4 வயசு ஆகுது. இப்போவரைக்கும் என் பையனுக்கு அந்த பிரச்னை சரியாகல. ஒரு பிசினஸ் வுமனாவும் தோற்றுட்டேன். ஒரு அம்மாவாவும் தோற்றுட்டேன்னு மனசு உடைஞ்சு நின்னப்போ, என் கணவர் சபரிதான் பெருந்துணையா நின்னாரு. திரும்பவும் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண அவர்தான் கடன் எல்லாம் வாங்கி, நகையையெல்லாம் அடமானம் வெச்சு நம்பிக்கையோடு பணம் கொடுத்து உற்சாகப்படுத்தினாரு. ஆரா பொட்டிக்கை ட்ரெஸ் எல்லாம் இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் வீடியோவா போட ஆரம்பிச்சோம்.
நாங்க போடுற ரீல்ஸ் மூலமா எங்களோட ட்ரெஸ்ஸு, சாரி, சுடிதார், கம்மல் எல்லாமே செம்ம வைரல் ஆக ஆரம்பிச்சது. இப்போ, 3 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. பொட்டிக்கும் ரன் பண்றோம், ஆன்லைனிலும் சேல்ஸ் பண்றோம். நான், ஆன்லைன் பிசினஸை பார்த்துக்கிட்டா, அவர் பொட்டிக்கை பார்த்துக்கிறாரு. சொந்த பிசினஸ்ங்குறதால சுதந்திரமா இருக்கலாம். வீட்டுக்கு எப்போவேணாலும் வந்துட்டுப் போகலாம்.
நான், காபி போட சொல்றதுகூட அவர் குடிக்கத்தான். கடையில பிசியாவே இருப்பாரு. பத்து நிமிஷம்கூட பிரேக் எடுத்துக்காம உழைப்பாரு. கடையில டீ, காபி போய் குடின்னாக்கூட கேக்கமாட்டார். அதனாலதான், அவரை காபி போடணும்னு வீட்டுக்கு வரவெச்சு கொஞ்சம் பிரேக் கொடுப்பேன். ’நீ வீட்டுக்கு வந்தாதான் காபி குடிப்பேன்’னு அடம்பிடிச்சாதான் அவர் வீட்டுக்கு வருவார். அதாவது, என்மேல இருக்கிற அன்புல அவர் வீட்டுக்கு வந்து பிரேக் எடுத்துக்குவார். கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு மீண்டும் போயி ஒர்க் பண்ணுவாரு.
மற்றபடி வீட்டுல சமைக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு எல்லா வேலையையும் நான் தான் செய்வேன். நீயா?நானாவுல ஜாலியா கேஷுவலா பேசினேன். அது, இப்படியொரு கண்ணோட்டத்துல வைரல் ஆகும்னு எதிர்பார்க்கல. இது எல்லா ஃபேமிலியிலும் நடக்குற சாதாரண விஷயம்தான். காலங்காலமா பெண்கள்தானே சமைச்சு கொடுக்கிறது, காபி, டீ போட்டு கொடுக்கிறதுன்னு செய்யுறோம். ஒரு ஆண் அன்பை வெளிப்படுத்தும் விதமா காபி போட்டு கொடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? ஆணும் பெண்ணும் சமம். அதைக்கூட எல்லா பெண்களும் எதிர்பார்க்கிறது கிடையாது. எல்லாருமே வீட்லயும் ஆஃபிஸுலயும் உழைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.
சாதாரணமா எளிமையான விஷயமான காபி போட்டு கொடுக்கிறதையே, ’ஒரு கணவனை காபி போட்டு கொடுக்க வைக்கிறா, வேலையை எல்லாம் விட்டுட்டு காபி போட சொல்றா. இவ ஒரு டாக்ஸிக் பொண்ணு, இந்த பொண்ணை டைவர்ஸ் பண்ணனும்’ன்னுல்லாம் விமர்சிக்கிறாங்க. ரெண்டு நிமிட வீடியோவை பார்த்துட்டு அவங்க அவங்களாகவே கற்பனை பண்ணிக்கிட்டு ஜட்ஜ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. எவ்ளோ ஆணாதிக்கத்தனம் நிரம்பியிருக்கு பாருங்க.
இதுல வேதனை என்னன்னா, பெண்களே என்னை எதிர்க்கிறாங்க. பார்க்குற அவங்களோட கண்ணோட்டத்தைதான் மாத்திக்கணும். அவங்களை இந்த சமூகம்தான் இப்படி மாத்தியிருக்கு. என் மேல எந்த தப்பும் கிடையாது. மாற வேண்டியது விமர்சிக்கிறவங்களும் அவங்களோட பார்வையும்தான். சோஷியல் மீடியாங்குறது வேற, ரியாலிட்டிங்குறது வேறங்குறதை அவங்க புரிஞ்சிக்கணும்.
வீடியோ வைரலானதால என்னைத்தான் எல்லாரும் திட்டினாங்க. என் கணவரை யாராவது திட்டியிருந்தா என்னால தாங்கியிருக்க முடியாது. எங்க பிசினஸ்ஸை நாங்க ரொம்ப சக்சஸ்ஃபுல்லா பண்ணிக்கிட்டிருக்கோம். அதுல, வந்த முதல் வருமானத்தைக்கூட என் கணவருக்காகத்தான் செலவு செஞ்சேன். அதாவது, நகை எல்லாம் போடமாட்டாரு. ஆனாலும் அவருக்கு தங்கத்துல செயின், காப்பு, மோதிரம் எல்லாமே வாங்கிக்கொடுத்தேன். அப்படி சந்தோஷப்பட்டார். கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் செய்ற சின்ன சின்ன விஷயங்களும் விட்டுக்கொடுத்துப் போறதுலயும்தான் அன்பே அடங்கியிருக்கு.
என் கணவர் சபரிக்கு ஃபிஷ்னாலே புடிக்காது. அவருக்கு பிடிக்கிற மாதிரி சமைச்சுக்கொடுத்து இப்போ ஃபிஷ்தான் அவரோட ஃபேவரைட் ஆகிடுச்சு. எங்களுக்குள்ள ஒளிவு மறைவே கிடையாது. அந்தளவுக்கு லவ் பன்றோம். இன்னும்சொல்லப்போனா என்னை ட்ரோல் பன்றதுக்கு என் கணவர் எனக்குத்தான் ஆறுதல் சொல்லி சப்போர்ட்டிவ்வா இருக்காரு. என்னோட அம்மா, தம்பி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்குமே என்னைப் பத்தி நல்லாவே தெரியும். அதனால, இதை ஃப்ரியா விடுன்னு சொல்லிட்டாங்க.
என்னை ட்ரோல் பன்ற கணவர்கள் தங்களோட மனைவிக்கு ஒரு காபியோ டீயோ இல்ல பிடிச்ச மாதிரி செஞ்சு பாருங்க. உங்க லைஃப் எவ்ளோ பியூட்டிஃபுல்லா போகும்னு தெரியும். இதை இவர்கள்தான் செய்யணும்ங்குற எண்ணத்தோடு கறாரா இருந்தா, உங்க லைஃப் நிச்சயமா போர் அடிச்சு போய்டும். அந்த வழக்கமான வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் சுவாரஸ்யத்தையும் உங்களால அனுபவிக்கமுடியாது” என்கிறார் கேஷுவலாக
+ There are no comments
Add yours