மும்பை: ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் ஆமீர்கான் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக ஆமீர்கான் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆமீர்கான் தனது 35 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்து பேசியதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். கடந்த பல தேர்தல்களில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
ஆமீர்கான் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டோம். இது ஓர் உண்மைக்கு புறம்பான போலியான வீடியோ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறோம். இது தொடர்பாக மும்பை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் ஆமீர்கானின் இந்த வீடியோ ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது போல வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.