ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவிலிருந்து விலகியிருந்த நடிகை ஆர்த்தி, தற்போது அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார்.
தெலுங்கு வெப் சீரிஸ், விஜய் சேதுபதி படம், யோகி பாபு படம், ஜீவா படம் என சினிமாவிலும் மற்றொருபுறம் அரசியலிலும் பிஸியாக இருப்பவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
“தமிழ்நாட்ல இத்தனைக் கட்சிகள் இருக்கும்போது, பா.ஜ.கவில் ஏன் இணைந்தீர்கள்?”
”நான் பா.ஜ.கவில் இணைய முக்கியக்காரணமே அண்ணாமலை அண்ணன்தான். அதாவது, அண்ணாமலை அண்ணன் வருவதற்கு முன்பு, வந்ததற்கு பிறகுன்னுதான் பா.ஜ.கவைப் பிரிக்கணும். என்னோட கணவர் கணேஷ் பா.ஜ.கவிலதான் இருக்கார். நானே, அவர்க்கிட்ட பா.ஜ.கவில யாராவது பாயிண்ட்-ஐ எடுத்து வைக்கிறீங்களான்னு கேட்பேன். அண்ணாமலை அண்ணன் வந்தப்புறம்தான், ரொம்ப புள்ளி விவரத்தோடு பாயிண்ட் எடுத்து வைக்கிறதை பார்த்தேன். கலைஞர் அய்யா, பிரஸ் மீட்ல யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாரு. அண்ணாமலை அண்ணனும் அப்படித்தான். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவாரு, அவளோ அறிவு. இப்படி பிரஸ் மீட்டுல பதில் சொல்ற திறமை ஸ்டாலின் அண்ணாவுக்கும் இல்ல, உதயநிதி ப்ரோவுக்கும் இல்ல. கலைஞர் உயிரோடு இருந்திருந்தா அண்ணாமலை அண்ணனைத்தான் அரசியல் வாரிசா அறிவிச்சிருப்பாரு. அண்ணாமலை அண்ணன் கண்ணாடி மாதிரி. நீங்க இங்கிலீஷ்ல பேசினா இங்கிலீஷ்ல பேசுவார். இந்தியில பேசினா இந்தியில பேசுவார். தர லோக்கலா பேசினா, அவரும் தர லோக்கலா கீழ இறங்கி பேசுவாரு. அந்தளவுக்கு அரசியல் சாணக்யன். அதுவும் ஐ.பி.எஸ். படிச்சுட்டு வந்திருக்காரு.
அம்மா மறைவுக்கப்புறம் அ.தி.மு.கவுல சரியான தலைமை இல்ல. தி.மு.கவையும் நான் அப்படித்தான் பார்க்குறேன். இத்தனை வருசமா திராவிட கட்சிகள் இரும்புக் கோட்டை மாதிரி தமிழ்நாட்டை வெச்சிருக்காங்க. ஆனா, அண்ணாமலை அண்ணன் வந்தபிறகுதான் அவங்களுக்கே ஒரு சிம்ம சொப்பனமா இருக்காரு. பயங்கர டேலண்ட். அப்டேட்டா இருக்காரு. நல்லா படிச்சு ஆரோக்கியமா இருக்கிற ஒரு தலைவரை தமிழ்நாடு பார்த்து ரொம்ப நாளாச்சு.
அதுவும், அவர் இளைஞரா இருக்காரு. தமிழ்நாட்டுக்கு அவர்தான் ஒரு சிறந்த தலைவரா வருவாரு. அவர், தலைவரா வந்தபிறகுதான் தமிழ்நாட்டுல பா.ஜ.கவுக்கு தனி அந்தஸ்து வந்திருக்கு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா மேல மக்களுக்கு எப்படி நம்பிக்கை வந்துச்சோ அந்த மாதிரி அண்ணாமலை அண்ணன் மேல நம்பிக்கை வந்திருக்கு. அவங்களுக்குப்பிறகு சிறந்த தலைவரா அண்ணாமலை இருக்காரு. அவரோட செயல்பாடுகளை பார்த்து இம்ப்ரஸ் ஆனதாலதான் பா.ஜ.கவுல சேர்ந்தேன். அதுவும்,நான் கோவை மாவட்டம். என்னோட ஊர்ல அண்ணன் போட்டியிடுறது ரொம்ப சந்தோஷம்.”
“ஆனா, அண்ணாமலை பேசும்போது தகவல்களை தவறா சொல்லி அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாகுறாரே?”
”அரசியல் தலைவர்கள்னா ரொம்ப டென்ஷனா இருப்பாங்க. பேசும்போது வாய்த்தவறி சொல்றது இயல்புதான். அதுவும், அவர் தப்பா சொல்ற மாதிரி எனக்கு தெரியல. திமுகவினர்தான் வேணும்னே அவரை ட்ரோல் பண்றாங்க. முதல்வர், மு.க ஸ்டாலினைப் பாருங்க பார்த்து படிக்கும்போதே தப்பு தப்பா படிக்கிறார். அண்ணாமலை அண்ணன் அப்படியா செய்றாரு?”
”பணம் கொடுத்து பிரபலங்களை பா.ஜ.க இழுக்கிறாங்கன்னு குற்றச்சாட்டு இருக்கே?”
”என்கிட்டேயும் இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்கிறாங்க. எல்லா கட்சியிலும் பிரசாரத்துக்கு போனா பணம் கொடுப்பாங்க. ஆனா, இந்தக் கட்சியில சேரும்போதே சொல்லிட்டாங்க. பணம் எதுவும் கொடுக்கமாட்டோம். இது சேவை செய்யுற கட்சின்னு சொல்லிட்டாங்க. இப்படியொரு கட்சியைப் பார்க்க முடியுமா? மக்கள் சேவை செய்யுற எண்ணம் இருந்தா மட்டும் கட்சிக்குள்ள வாங்கன்னு கூப்பிட்டாங்க. ஒரு ரூபாய்கூட அவங்களும் கொடுக்கல, நானும் எதிர்பார்க்கல.”
”மக்கள் சேவைன்னு நீங்க சொன்னாலும், தமிழ்நாட்டுல மக்கள் புறக்கணிப்பு செய்துகிட்டே இருக்காங்களே…?”
”நிச்சயமா தமிழ்நாட்டுல தாமரை மலர்ந்தே தீரும். அதோட நறுமணம் வீசும்போதுதான் அருமை புரியும். இது, தமிழ்நாட்டுக்கான தேர்தல் இல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தேர்தல். எதிரி நாடுகள்கிட்டேயிருந்து, இந்த தேசத்தைக் காப்பாற்ற மோடி சிங்கம் மாதிரி செயல்பட்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, காங்கிரஸுல அப்படியொரு தலைவரைக் காட்டுங்க பார்ப்போம். தி.மு.கவிலும் அ.தி.முகவிலும் தங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கிறாங்க. ஆனா, மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசுக்கிட்டதான் போயி நிற்கணும். அதுக்கு, நேரடியாகவே பா.ஜ.கவுக்கு ஓட்டுபோட்டு அண்ணாமலை அண்ணன்கிட்ட கேட்டா, உடனே செஞ்சி கொடுப்பாரு. தமிழ்நாட்டு மக்கள் நம்ப மேல அன்பா இருக்காங்கன்னு பிரதமரும் நல்லது செய்வாரு.
திமுக இந்தி திணிப்பு… இந்தி திணிப்புன்னு சொல்லி ஓட்டு போடவேண்டாம்னு சொல்றாங்க. ஆனா, இவங்க பிள்ளைங்க எல்லாம் இந்திதான் படிக்கிறாங்க. சாமி கும்பிட வேணாம்னு சொல்றாங்க. ஆனா, சி.எம்மோட மனைவி தினமும் கோயிலுக்குப் போறாங்க. தமிழ்நாட்டு மக்களை ரொம்ப ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. பாவம் அவங்க எல்லாம். மக்களுக்கு எல்லா உண்மைகளையும் அண்ணாமலை அண்ணன் தெரியப்படுத்திக்கிட்டுதான் வர்றாரு. மக்களும் புரிஞ்சுக்கிட்டு வரும் தேர்தலிலேயே தாமரையை மலர வைப்பாங்க”
”பா.ஜ.கவுல பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லைங்குறாங்களே, பா.ஜ.கவில் இருந்த பெண் தலைவர்களே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்றாங்களே? ”
”எல்லா கட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பா இருக்கா என்ன? பெண்களுக்கு ஒழுக்கம் இருந்தா பாதுகாப்பு இருக்கும். ஒழுக்கம் இல்லாம இருந்தா எங்க போனாலும் பிரச்சனைதான். நாம, இருக்கிற முறையில இருந்துட்டா பெண்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. பெண்களுக்கு முக்கியத்துவமும் பாதுகாப்பும் கொடுக்கிற கட்சியே பா.ஜ.கதான்.
தமிழிசை அக்காவை பாருங்க, ரெண்டு ஸ்டேட்டுக்கு கவர்னரா இருந்திருக்காங்க. பல பெண்கள் பா.ஜ.கவுல முக்கிய பதவிகளில் இருக்காங்க. பிரதமர் மோடியே பெண்களை மகா சக்தியாதான் சொல்றாரு. பா.ஜ.கவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைங்குறது எதிர்கட்சிகள் கிளப்பி விடுற பொய்கள். எங்க எந்த பிரச்சனை நடந்தாலும் அதை பெரிசு பண்ணி விமர்சிக்கிறாங்க.”
+ There are no comments
Add yours